இந்தியாவின் பழைமையான தொழில் குழுமமான டாடா சன்ஸ் உப்பு, ஸ்டீல், ஐ.டி, எலெக்ட்ரானிக்ஸ், கன்ஸ்யூமர், மின்சாரம், கெமிக்கல்ஸ் என பல துறைகளில் தொழில் செய்து வருகிறது.
டாடா சன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால், டாடா சன்ஸ் குழுமம் பட்டியலிடப்படாத நிறுவனமாகவே தொடருகிறது.
டாடா சன்ஸ் குழுமத்தின் பெரும்பான்மைப் பங்குதாரர்களான தொராப்ஜி டாடா அறக்கட்டளைக்கு 28% பங்கும், ரத்தன் டாடா அறக்கட்டளைக்கு 24% பங்கும் இருக்கிறது.
இது போக, சைரஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், ஸ்டெர்லிங் இன்வெஸ்ட்மென்ட், ஜே.ஆர்.டி டாடா அறக்கட்டளை, டாடா கல்வி அறக்கட்டளை, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா கெமிக்கல்ஸ், ஆர்.டி டாடா அறக்கட்டளை உள்ளிட்ட நிறுவனங்களும் பங்குதாரர்களாக இருக்கின்றன. டாடா சன்ஸ் குழுமத்தின் மொத்த மதிப்பு சுமார் 410 பில்லியன் டாலர்.
ஆனால், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, டாடா சன்ஸ் குழுமம் கட்டாயமாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டியிருந்தது. அதாவது, 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், டாடா சன்ஸ் நிறுவனத்தை ஒரு வங்கி சாரா நிதி நிறுவனமாக (NBFC – Upper Layer) ரிசர்வ் வங்கி வரையறுத்தது.
இதற்குக் காரணம், வங்கிகளிடம் டாடா சன்ஸ் வாங்கியுள்ள அதிக அளவிலான கடன்கள்தான். இதன்படி, மூன்று ஆண்டுகளில் டாடா சன்ஸ் நிறுவனம் கட்டாயமாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும்.
ஆனால், டாடா சன்ஸ் நிறுவனமோ தொடர்ந்து பட்டியலிடப்படாத நிறுவனமாகவே தொடர விரும்புகிறது. இந்த கட்டாயத்தில் இருந்து வெளியேறுவதற்காக, டாடா சன்ஸ் நிறுவனம் 20,300 கோடி ரூபாய் கடன்களை அடைத்துவிட்டது. இதனால், புரமோட்டரின் ரிஸ்க் கணிசமாக குறைந்துவிட்டது. மேலும், டாடா சன்ஸ் தொடர்ந்து பட்டியலிடப்படாத நிறுவனமாகவே தொடரும்.