Railway Board: 119 வருட ரயில்வே வாரிய வரலாற்றில் முதல் பட்டியலின CEO… யார் இந்த சதீஷ் குமார்?!

1905-ல் தொடங்கப்பட்ட 119 வருட இந்திய ரயில்வே வாரியத்துக்கு முதல் முறையாகத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், `இந்திய ரயில்வே மேலாண்மை சேவை (IRMS), உறுப்பினர் (டிராக்ஷன் & ரோலிங் ஸ்டாக்) சதீஷ் குமாரை ரயில்வே வாரியத்தின் தலைவராக மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்ய நியமனக் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசு அறிக்கை

இதன் மூலம் சதீஷ் குமார், 119 வருட ரயில்வே வாரிய வரலாற்றில் முதல் பட்டியலின தலைமை நிர்வாக அதிகாரி என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார். மேலும், தற்போது அந்தப் பதவியிலிருக்கும் ஜெய வர்மா சின்ஹாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்த பிறகு, செப்டம்பர் 1-ம் தேதி முதல் பதவியேற்பார்.

இவரைப் பொறுத்தவரை, இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸின் (IRSME) 1986 பேட்ச் சேர்ந்தவரான இவர் 38 ஆண்டுகாலம் பல மண்டலங்கள் மற்றும் பிரிவுகளில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்திருக்கிறார். குறிப்பாக, ரயில்வே அமைப்புக்குள் முக்கியமான பாதுகாப்பு மேம்பாடுகளைச் செயல்படுத்துதல் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

சதீஷ் குமார் – CEO of Railway Board

இவர் குறித்து பேசியிருக்கும் ரயில்வே வாரிய அதிகாரியொருவர், “நவம்பர் 8, 2022 பிரக்யராஜில் வட மத்திய ரயில்வேயின் பொது மேலாளராகப் பொறுப்பேற்றது அவரின் இந்தப் பயணத்தில் ஒரு மைல்கல். மேலும், புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்சுகள் மற்றும் வந்தே பாரத் மெட்ரோ ரயில் திட்டங்களில் இவர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். இவரின் வேலையைப் போலவே, இவரின் கல்வியும் கவனம் ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது. ஜெய்ப்பூரிலுள்ள புகழ்பெற்ற மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (MNIT) இயந்திரப் பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றிருக்கும் இவர், ஆபரேஷன் மேனேஜ்மென்ட்டில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்கிறார். அதோடு, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சைபர் சட்டம் (Cyber Law) பயின்றிருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88