இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஆன்லைனில் அதிகரிக்கும் பண மோசடி… மக்களே உஷார்..!

ஆன்லைனில் புதிய புதிய மோசடிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. கோவையைச் சேர்ந்த ராமசாமி என்பவர், இன்ஸ்டாகிராம் பதிவைப் பார்த்து ‘Super drinks stock trading’ என்கிற வாட்ஸப் குழுவில் சேர்ந்துள்ளார். பிறகு அதில் வந்த லிங்க் மூலம் ‘Bain’ என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்திருக்கிறார்.

அதில், தன்னுடைய செல்போன் எண், வங்கிக் கணக்கு விபரங்களை பதிவு செய்து ரூ.9,08,100 முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் அவரது செயலியில் ரூ.32 லட்சம் பணம் இருப்பதாக காண்பித்துள்ளது. 

ஆன்லைன் மோசடி

ராமசாமி மகிழ்ச்சியில் பணத்தை எடுப்பதற்கு முயற்சித்தபோது, மேலும் பணம் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்போதுதான் அவர்  தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகாரளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் சென்றனர்.

அங்கு உள்ளுர் காவல்துறையினரின் உதவியுடன். சத்ய நாராயண் (30), கிஷன் சௌத்ரி (20),  சுனில் சரண் (23), சந்தீப் குமார் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து நான்கு மொபைல் போன்கள், 5 சிம் கார்டுகள் மற்றும் நான்கு வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. சத்யநாராணயனுக்கு பல்வேறு வங்கிகளில் 8 வங்கிக் கணக்குகளும், சந்தீப் என்பவருக்கு பல்வேறு வங்கிகளில் 3 வங்கிக் கணக்குகளும் இருப்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்

இவற்றில் ரூ.3,59,650 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி மூலம் குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ .3 கோடிகளுக்கு மேல் பரிவர்த்தனை ஆகியுள்ளது.

சூலூர் பகுதியைச் சேர்ந்த  தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஓய்வு பெற்ற துணை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன். இவருக்கு வாட்ஸப் வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. அதில் சிபிஐ அதிகாரி என்று பேசிய நபர், “உங்கள் பெயரில் வந்த கூரியரில் போதை மருந்து கடத்தப்பட்டுள்ளது. அதனால் வழக்குப்பதிவு செய்துள்ளோம். உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எங்களுக்கு அனுப்புங்கள். நாங்கள் சோதனை செய்துவிட்டு திருப்பு அனுப்புகிறோம்.” என்று கூறியுள்ளனர். அதை நம்பி கோபாலகிருஷ்ணன் ரூ.35 லட்சம் அனுப்பியிருக்கிறார்.

ஆன்லைன் மோசடி

ஆனால் பணம் திரும்பி வரவில்லை. அப்போதுதான் கோபாலகிருஷ்ணன் அதை மோசடி என்று உணர்ந்து காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

இதேபோல மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிராங்க்ளின். இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதேபாணியில் வாட்ஸப் வீடியோ காலில் போலி சிபிஐ அதிகாரி வழக்குப்பதிவு செய்துள்ளதாக மிரட்டி ரூ.25 லட்சம் வாங்கியுள்ளார்.

இதுகுறித்து பிராங்க்ளினும்  சைபர் க்ரைம் போலீஸில் புகாரளித்துள்ளார். அதனடிப்படையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.