மசினகுடி: நாட்டிலேயே முதன்முறை; மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்தில் ரேஷன் கடை – என்ன காரணம் தெரியுமா?

நீலகிரியில் வனங்களையும் வாழிடங்களையும் இழந்து தவிக்கும் வனவிலங்குகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலவி வருகின்றன. அதிலும் குறிப்பாக யானை, கரடி, காட்டு மாடு போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் காணப்படுவது இயல்பான ஒன்றாக மாறி வருகிறது. யானை மற்றும் கரடிகளுக்கு குடியிருப்பு பகுதிகளில் உணவு கிடைக்காத சூழலில் அந்தப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்கள் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளே நுழைகின்றன.

3 அடுக்கு பாதுகாப்புடன் ரேஷன் கடை

உள்ளே வைக்கப்பட்டிருக்கும் அரிசி, கோதுமை, ராகி, பாமாயில் போன்றவற்றை உண்டுச் செல்கின்றன. குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மசினகுடி போன்ற பல பகுதிகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இவற்றை உண்பதால் வனவிலங்குகளுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படுவதுடன் மக்களுக்குத் தேவையான குடிமை பொருள்களை இருப்பு வைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பெரிய அளவில் பயனளிக்காத நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக மூன்றடுக்கு இரும்பு தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் ரேஷன் கடைகளைக் கொண்டுவர கூட்டுறவுத்துறை மூலம் திட்டம் வகுக்கப்பட்டது. சோதனை முயற்சியாக மசினகுடியில் உள்ள ரேஷன் கடை ஒன்றை இந்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

3 அடுக்கு பாதுகாப்பு ரேஷன்

அந்த ரேஷன் கடையில் இருந்த குடிமை பொருள்களை கரடி மற்றும் யானைகள் சேதப்படுத்தி வந்த நிலையில், தற்போது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படும் ரேஷன் கடைகளுக்கும் இது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த திட்டம் குறித்து தெரிவித்த கூட்டுறவுத்துறை அதிகாரிகள், “வனவிலங்குகள் சேதப்படுத்தும் ரேஷன் கடைகளை கணக்கெடுத்து, அந்தக் கடைகளைச் சுற்றிலும் சோலார் மூலம் தொங்கு மின்வேலி அமைக்கப்படும். அதன் உட்புறமாக முதலாம் இரும்பு நுழைவாயில் மற்றும் இரும்பு கதவுகள் அமைக்கப்படும். மூன்றாவதாக இரும்பு ஷெல்ட்டர் பொருத்தப்படும்.

3 அடுக்கு பாதுகாப்பு ரேஷன்

இதனால், யானை மற்றும் கரடிகள் உள்ளே நுழைவது நூறு சதவிகிதம் தடுக்கப்படும். மசினகுடியில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதன்முறையாக வனவிலங்கு அச்சுறுத்தலில் இருந்து ரேஷன் கடைகளையும், உணவுப் பொருள்களையும் பாதுகாக்க கூட்டுறவுத்துறை இந்த முயற்சியை எடுத்துள்ளது. மற்ற கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்” என்றனர்.