சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு எனக்கும் அழைப்பு வந்தது. அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னம், மாநில அரசின் செயலாளர் பெயர்தான் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு நடத்தியதாக, முதலமைச்சர் கூறுகிறார். தி.மு.க அரசை குற்றம்சாட்டினால், பா.ஜ.க மாநிலத் தலைவர் என்னை குறைசொல்கிறார். மத்திய தலைவர்கள் வெளியிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு புகழ் கிடைக்கும் என அண்ணாமலை கூறுகிறார். அவரின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது. அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை. அண்ணாமலை பிறப்பதற்கு முன்னாகவே எம்.ஜி.ஆர் தமிழ்நாடு முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
தனக்கென்று தனி முத்திரை பதித்தவர். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை பெற்றவர் என்று பெருமையாக சொல்லப்படுபவர். அப்போது உங்கள் தலைவர்கள் எந்தப் பதவியிலும் இல்லை. தி.மு.க-வை போல பா.ஜ.க-வும் இரட்டை வேடம் போடுகிறது. 10 ஆண்டுகளில் பா.ஜ.க ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை, கடன் சுமைதான் அதிகரித்துள்ளது. மத்தியில் ரூ.55 லட்சம் கோடியாக இருந்த கடன், 10 ஆண்டுகளில் 165 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திற்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. பொய்களை மட்டுமே பேசுபவர்தான், தமிழக பா.ஜ.க தலைவராக உள்ளார். அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் இருந்ததாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். ஏன் அது எங்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட போது தெரியவில்லையா.
அண்ணாமலைக்கு என்னை விமர்சிப்பதைத் தவிர வேறு என்ன வேலை. அவர் வேறு என்ன செய்திருக்கிறார். மைக்கை கண்டால் அவருக்கு வியாதி. உடனே பேசத் தொடங்கிவிடுவார். எல்லோரும் உழைத்து பதவிக்கு வந்தனர். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தார். அந்தக் கட்சியில் உழைத்த எத்தனையோ தலைவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. இவர் வேறு ஏதோ வழியில் பதவி பெற்றுள்ளார். அதை வைத்து இன்று தலை, கால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார். நான் கிளைச் செயலாளர் பதவியில் இருந்து 52 ஆண்டு காலம் உழைத்துதான் முதலமைச்சர், பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துள்ளேன். மக்களை பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவரின் ஒரே முதலீடு வாயும் நாக்கும் தான். தன்னை மட்டுமே விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்” எனக் கொதித்தார்.
இந்தசூழலில் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “திராவிடக் கட்சிகள் 70 ஆண்டுகளாகத் தமிழகத்தைச் சின்னாபின்னமாக்கி உள்ளன. காமராஜர், எம்ஜிஆர் இருவரும் நேர்மையான ஆட்சியைக் கொடுத்தனர். தற்போது இருக்கும் முதல்வர்கள் தமிழகத்தை பின்னோக்கிக் கொண்டு செல்கிறார்கள். துரைமுருகன், எ.வ.வேலு போன்றோர் இருக்கும்போது, அரியணை உதயநிதிக்குச் சென்றால் கலவரம் வெடிக்கும் என்பதை ரஜினிகாந்த் தனது பேச்சில் சுட்டிக்காட்டி இருக்கிறார். எப்போது துணை முதல்வராக உதயநிதி வருவார் என அமைச்சர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வந்துவிட்டார் என்றால் அவர்களின் குழந்தைகளின் வாழக்கையை பாதுகாத்து விடலாம் என இருக்கிறார்கள். தி.மு.க-வினர் பழனிக்குச் செல்கிறார்கள். ஆண்டிக்கோலத்தில் முருகன் இருக்கிறார். அரசியலுக்காக கை வைப்பவர்கள் மண்ணோடு மண்ணாகப் போவார்கள். தி.மு.க-வினர் பழநியில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை வேரறுப்போம் எனக் கூறியவர்கள், பழநிக்குப் பால்காவடி எடுப்பதற்குப் பதிலாக, அரசியல் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், சொந்த பலத்தில் நிற்க வேண்டும்” என்றார்.
பிறகு எடப்பாடி பக்கம் தனது பாராவை திரும்பியவர், “நமக்கு தி.மு.க, அ.தி.மு.க இருவரும் எதிரிகள்தான். தி.மு.க என்பது தீய சக்தி. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க பெட்டிங் ஏஜென்ட் கட்சியாக இருக்கிறது. பழனிசாமி என்னைப் பற்றியும், கட்சியைப் பற்றியும் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். யாரையோ பிடித்து, உழைக்காமல் பதவிக்கு வந்த அண்ணாமலைக்கு என்ன தெரியும். மைக்கை பார்த்தாலே பொய் பேசுவார் எனச் சொல்லியிருக்கிறார். அதற்கு நான் கருத்துச் சொல்ல வேண்டும். முன்னொரு காலத்தில் சிலுவம்பாளையத்தில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் பின்னர் தி.மு.க அமைச்சரின் தயவால் அந்த வழக்கை உடைத்து சிலுவம்பாளையம் பஞ்சாயத்துத் தேர்தலில் நின்று தோற்றவர்தான் இந்த பழனிசாமி.
எனவே நீங்கள் நேர்மையைப் பற்றி எனக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம். கூவத்தூரில் நடந்தது கட்சியின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வா?. அங்கு நடந்தது அலங்கோலம். டெண்டர் சிஸ்டத்தில் முதல்வரைத் தேர்வு செய்தார்கள். ஹைய்ஸட் பிட்டராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். என்ன பிட்டிங் என்றால் எந்த எம்எல்ஏ-வுக்கு மாசம், மாசம் எவ்வளவு என்ன பணம் கொடுக்க வேண்டும் என்பதுதான் கூவத்தூரில் நடந்த பிட்டிங் முறை. அதன்பிறகு தவழ்ந்து வந்து முதல்வர் பதவியைப் பிடித்தவர் எடப்பாடி. தன்மானம் மிக்க ஒரு விவசாயின் மகனை, 10 ஆண்டுக்காலம் பச்சை இங்கில் கையெழுத்துப் போட்டு ஒரு பைசா வாங்காத இந்த அண்ணாமலையைப் பார்த்துப் பேசுவதற்கு எடப்பாடி என்கிற தற்குறிக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. இது அகந்தை. 2026-ம் ஆண்டு புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி நடத்திய கட்சி கிணற்றுத் தவளைகள் வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்கள். தூக்கியெறியப்படுவீர்கள். நான்காவது இடம் கூட 2026 தேர்தலில் கிடைக்காது.
2019-ம் ஆண்டு வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதற்குச் சென்றார். கூட்டணிக் கட்சி முதல்வர்கள் அங்குச் சென்றார்கள். நீங்களும் வாங்கண்ணா போகலாம் என்றேன். அதற்கு எடப்பாடி தோற்கப்போகும் மோடிக்காக நான் ஏன் வாரணாசிக்கு வர வேண்டும் என்றார் எடப்பாடி. அதை இல்லை என்று எடப்பாடி சொல்லட்டும். என்னுடைய தலைவனைப் பற்றி எடப்பாடி எப்படி தவறாகப் பேச முடியும். அன்றிலிருந்து மானமுள்ள அண்ணாமலை கூட்டணிக் கட்சித் தலைவராக எடப்பாடியைப் பார்த்தது இல்லை. தவழ்வதைப் பற்றி, ஒருவரின் காலை பிடித்து ஆட்சிக்கு வருவது பற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் எம்எல்ஏ-க்களுக்கு மாசம், மாசம் பணம் கொடுத்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி தயவுசெய்து எனக்குப் பாடம் எடுக்க வேண்டாம்.
தமிழகத்தில் திராவிட கட்சிகளை அகற்ற பா.ஜ.க-வால் மட்டுமே முடியும். தி.மு.க கொள்ளையடித்து, அவர்களுடைய கட்சிக்காகச் சொந்தக்காரர்களின் ஆடிட்டர் வைத்துச் சேர்த்து வைப்பார்கள். எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சம்பந்தி மூலமாகக் கொள்ளையடித்து ஒடிசா, பீகார், ஜார்கண்டில் இருக்கும் மைன்ஸில் சேர்ந்து வைப்பார். இருவருக்கும் அடிப்படை வித்தியாசம் இதுதான். எப்போதும் பா.ஜ.க-வுக்கும், தி.மு.க-வுக்கும் தமிழகத்தில் உறவு இருக்காது. அதற்கான வாய்ப்பு இல்லை. இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் கட்சியில் இங்கு இருப்பவர்கள் தலைவர்கள் இல்லை. அடிமைகள். உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி முதல் ஊராட்சி வரை 1 லட்சத்து 12 ஆயிரம் இடங்களில் பா.ஜ.க நிற்க வேண்டும். வரும் செப்.1-ம் தேதி முதல் பா.ஜ.க-வின் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்குகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் 10 லட்சம் பேரையாவது கட்சியில் சேர்க்க வேண்டும். 2 மாதத்தில் 1 கோடி பேரை உறுப்பினர்களாகக் கட்சியில் சேர்ப்பது என்ற இலக்கை எட்ட வேண்டும்” என வெடித்தார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “எடப்பாடி அரசியல் ரீதியாகவே விமர்சனம் செய்கிறார். அண்ணாமலை பொய் சொல்கிறார். திமுக-வை திட்டனால் பாஜக தலைவருக்கு ஏன் கோபம் வருகிறது. பாஜக தலைவர்கள் பேசினால்தான் எம்ஜிஆர் புகழ் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என அண்ணாமலை சொல்வதை நான் ஏற்க மாட்டேன் என்றுதான் எடப்பாடி சொல்கிறார். ஆனால் மறுபக்கம் அண்ணாமலை தனிமனித தாக்குதலை மேற்கொள்கிறார். 2019-21 தேர்தலின் போது திமுக மேற்கொண்ட பிரச்சாரத்தை எடுத்து தற்போது அண்ணாமலை பேசுகிறார். சிலுவம்பாளையத்தில் நடந்த கொலை வழக்கை திமுகதான் பேசியது. அண்ணாமலை கண்டுபிடிக்கவில்லை. மேலும் தற்குறி, தவழ்ந்து வந்து பதவியை பிடித்தவர் என்றெல்லாம் பேசுகிறார்.
இதையெல்லாம் தெரிந்துகொண்டு தானே அவருடன் கூட்டணிக்கு அண்ணாமலை சென்றார். அரவக்குறிச்சி தேர்தலில் எடப்பாடி பிரசாரம் செய்ய அண்ணாமலை பின்னால் நின்று கொண்டு இருந்தார். ஆனால் திடீரென ஞனோதயம் வந்து அதிமுக ஊழல் கட்சி, டெண்டர் எடுத்து பதவிக்கு வந்தார் என்கிறீர்கள். இதையெல்லாம் கடந்து மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு 165 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வளவு கடன் வாங்கி தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்களை கொண்டுவந்தீர்கள் என எடப்பாடி கேட்கிறார். அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக வந்த பிறகு தமிழகத்திற்கு கொண்டுவந்த திட்டங்கள் என்ன என்கிற கேள்விகளை கேட்டிருக்கிறார்.
இதற்கெல்லாம் அண்ணாமலை பதில் சொல்லவில்லை. 2019-ம் ஆண்டில் வாரணாசியில் மோடி மனுதாக்கல் செய்தபோது எடப்பாடியை அழைத்தேன். அவர் வரவில்லை. என் தலைவரை ஏற்காதவரை நான் எப்படி கூட்டணி கட்சித் தலைவராக ஏற்பேன் என்கிறார். ஆனால் அந்த ஆண்டில் அண்ணாமலை காவல்துறை அதிகாரியாகவே இருந்தார். பிறகு எப்படி மோடியை தலைவர் என்கிறார். அதன்பிறகு 2021-ம் ஆண்டு ஏன் ஏற்றுக்கொண்டு பின்னால் சென்றார். இதெல்லாம்தான் கேள்வி. இதற்கெல்லாம் அண்ணாமலை சரியான பதில் சொல்ல வேண்டும். அப்படி செய்தால்தான் அரசியல். இரண்டு பக்கமும் நாகரீகமாக இருக்க வேண்டும். தனிமனித தாக்குதல் இருக்கக்கூடாது என அந்த கட்சி தலைவர் தமிழிசையே சொல்லியிருக்கிறார்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88