அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயன்றதை எதிர்த்த ரஷ்யா, கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி அந்நாட்டின்மீது போர் தொடுக்க ஆரம்பித்தது. போர் இரண்டாண்டைக் கடந்துவிட்டது, இடையில் உலக நாடுகள் பலவும் போர்நிறுத்தத்தை வலியுறுத்தின, ஆனாலும் ரஷ்யாவின் தாக்குதல் நின்றபாடில்லை. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி செய்துவருவதால் போரும் நீண்டுகொண்டே செல்கிறது.
இருப்பினும், போரின் தொடக்கம் முதல் ரஷ்யாவே ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், கடந்த சில நாள்களாக அமரிக்காவின் ஆயுதங்களுடன் ரஷ்யாவில் உக்ரைன் முன்னேறிவருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்புகூட, ரஷ்ய எல்லையில் ரஸ்தோ என்ற இடத்தில் விமானம் மூலமாக உக்ரைன் குண்டுவீசியதில் 10-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தனர். இவ்வாறிருக்க, இன்று காலை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு தென்கிழக்கே நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள சரடோ நகரில் `வோல்கா ஸ்கை (Volga Sky)’ அடுக்குமாடிக் குடியிருப்பில் ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன், ரஷ்யாவிடமிருந்து கடும் எதிர்வினையைத் தூண்டியிருக்கிறது.
குறிப்பாக, உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 38-வது மாடி சேதமடைந்திருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இந்த நிலையில், உக்ரைன்மீது ரஷ்யா நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குவதாகவும், ஐரோப்பிய நாடுகள் உதவுமாறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இது குறித்து ஜெலன்ஸ்கி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “உக்ரைன் முழுவதும், நமது ஐரோப்பிய அண்டை நாடுகளின் விமானப் போக்குவரத்து எங்களின் F-16 கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டால், உயிர்களைப் பாதுகாக்க நாம் இன்னும் நிறைய செய்ய முடியும். இத்தகைய ஒற்றுமை மத்திய கிழக்கில் நன்றாக வேலைசெய்திருந்தால், அது ஐரோப்பாவிலும் நிகழ வேண்டும். ஏனெனில், உயிருக்கு எல்லா இடங்களிலும் ஒரே மதிப்புதான். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் எங்களின் மற்ற ஆதரவு நாடுகள் இந்த பயங்கரவாதத்தை நிறுத்த எங்களுக்கு உதவும் வலிமை உள்ளவர்கள். இது தீர்க்கமான நடவடிக்கைக்கான நேரம்” என்று ட்வீட் செய்து வீடியோவும் பதிவிட்டிருக்கிறார்.