ஹரியானா நீதிபதி தேர்வில் வினாத்தாள் கசிவு: முன்னாள் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

2017ஆம் ஆண்டு ஹரியானா சிவில் சர்வீஸ் (ஜூடிசியல் பிரிவு) தேர்வு 109 சிவில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்காக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த  முதல்நிலைத் தேர்வுக்கான வினாத்தாள்கள், அப்போதைய உயர் நீதிமன்ற பதிவாளரான பல்விந்தர் குமார் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தேர்வும் திட்டமிட்டபடி, ஜூலை 16-ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில், சுமன் என்பவர் ஜூலை 16-ம் தேதி நடைபெற்ற சிவில் நீதிபதி தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததாகவும், ரூ.10 லட்சத்துக்கு வினாத்தாள்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், தேர்வை ரத்து செய்யக் கோரியும், ஆகஸ்ட் 2017-ல் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் உயர் நீதிமன்ற பதிவாளரான பல்விந்தர் குமார் சர்மா வசமிருந்துதான் தேர்வின் வினாத்தாள்கள் கசிந்தது தெரிய வந்தது.

வினாத்தாள் கசிவு

இதையடுத்து, இதுகுறித்து செப். 2017இல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் உயர் நீதிமன்ற பதிவாளரான பல்விந்தர் குமார் சர்மா, அவரது நெருங்கிய உறவினரான வழக்கறிஞர் சுனிதாவுக்கு தேர்வு வினாத்தாள்களை வழங்கியது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதும், இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்ததும் ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டது.

தொடர் விசாரணையில், உயர் நீதிமன்ற பதிவாளரான பல்விந்தர் குமார் சர்மாவிடமிருந்து முதல்நிலைத் தேர்வின் தேர்வுத் தாளை பெற்ற சுனிதா, அதனை தனது தோழியான சுசீலாவுக்கும் கொடுத்துள்ளார். இவர் தவிர,  மேலும் சிலருக்கும் தேர்வுத்தாள் ரூ. 10 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

விசாரணையின் முடிவில், உயர் நீதிமன்றம், சிவில் நீதிபதி தேர்வை ரத்து செய்து, விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்தது. இந்த வழக்கின் விசாரணையை, டெல்லிக்கு 2021இல் உச்ச நீதிமன்றம் மாற்றியது.

இவ்வழக்கில், பல்விந்தர் குமார் சர்மா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 120பி (குற்றச் சதி), 409 (அரசு ஊழியர் குற்றவியல் நம்பிக்கை மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13(1)(டி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல, சுனிதா, சுசிலா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 411 (நேர்மையற்ற முறையில் திருடப்பட்ட சொத்தை பெறுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், சுமார் 27 ஆண்டுகள் நீதித்துறை அதிகாரியாக இருந்த 56 வயதான உயர் நீதிமன்ற பதிவாளரான பல்விந்தர் குமார் சர்மா, விசாரணை காலத்தில் 9 மாதங்கள் மற்றும் 15 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

வழக்கறிஞராக பணிபுரியும் 50 வயதான சுனிதா, விசாரணை மற்றும் விசாரணை நிலுவையில் இருந்தபோது சுமார் 11 மாதங்கள் மற்றும் 9 நாள்கள் நீதிமன்றக் காவலில் இருந்தார். திருடப்பட்ட சொத்தைப் பயன்படுத்தியதாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுசிலா, 9 மாதங்கள் விசாரணை கைதியாக சிறையில் இருந்தார்.

சிறை

இதையடுத்து, இவ்வழக்கை விசாரித்த ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக இருக்கும் நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்த்னா, முன்னாள் உயர் நீதிமன்ற பதிவாளர் பல்விந்தர் குமார் சர்மா மற்றும் ரத்து செய்யப்பட்ட தேர்வில் முதலிடம் பெற்ற சுனிதா, சுசிலா  ஆகியோர் ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்களின் கீழ் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுனிதா தேர்வில் முதலிடமாக 546.8 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். சுசிலா 426.5 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். தேர்வு நடத்தும் பொறுப்பு அதிகாரியாக இருந்த, தேர்வு தாள்களை கைவசம் வைத்திருந்த உயர் நீதிமன்ற பதிவாளரான பல்விந்தர் குமார் சர்மாவின் உறவினரான சுனிதா, தேர்வில் முதலிடம் பெற்றதை யதார்த்தமாக நடைபெற்றதாக ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும், சுனிதா, சுசிலா, வழக்குத் தொடர்ந்த சுமன் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களில், சுமன் “நீங்கள் தேர்வு வினாத்தாளை பெற்றுக் கொண்டு, தேர்வுக்கு தயாரிப்பது எனக்குத் தெரியும். இதுதான் நான் உங்களை கடைசியாக அழைப்பது. உங்களைப் போன்ற ஒரு நேர்மையற்ற தோழி எனத் தேவையில்லை” என பேசிய உரையாடல்களும் வழக்கின் முக்கிய சாட்சியாக அமைந்தது.

இதையடுத்து, இவ்வழக்கில் பல்விந்தர் குமார் சர்மாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1.50 லட்சம் அபராதமும், சுனிதாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சுசிலாவுக்கு அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவர் ஏற்கெனவே சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலமாக கருதி, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீதான குற்றத்தை, அரசு தரப்பு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்காததால், அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும், நீதிபதி தனது தீர்ப்பில், இதுபோன்ற குற்றங்கள் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதற்கும், ரத்து செய்யப்படுவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன. இதனால், அரசு ஆட்தேர்வில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தேர்வுக்காக நேர்மையான முறையில் தயார் செய்து, தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் நபர்களை கடுமையாக பாதிக்கிறது. இது சமூகத்தின் மீதான நம்பிக்கையையும் குலைக்கிறது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கடுமையாகக் கையாளப்பட வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் குறையும் என தெரிவித்திருந்தார்.

நீதிமன்ற தீர்ப்பு

வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டின் மிகப்பெரிய கவலையளிக்கும்  பிரச்னையாக உள்ள நேரத்தில், இதுபோன்ற போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவு நிகழ்வுகள், ஆட்சேர்ப்பு மற்றும் தேர்வுகளில் தாமதத்தை அதிகரித்து, அரசின் நிர்வாகத் துறைகளின் செயல்பாடுகளை மோசமாக பாதிக்கிறது. இச்செயல்களைத் தடுக்க தற்போது இயற்றப்படவுள்ள பொதுத் தேர்வு (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம் 2024, மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதன்மூலம், இத்தகைய முறைகேடுகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளும், பொதுத் தேர்வுகளில் அதிக வெளிப்படைத் தன்மை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையைக் கொண்டு வர முடியும் என நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88