“தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும்..!” – அண்ணாமலைக்கு தமிழிசை கோரிக்கை

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியது விவாதமான நிலையில், இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்திருக்கிறார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோயிலுக்கு சென்ற தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அண்ணாமலை

அப்போது, “கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து முதல்வர் ஸ்டாலினிடமிருந்து வரும் என எதிர்பார்த்தோம். முருகன் மாநாட்டை நேரில் செல்லாமல், காணொளி வழியாக துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், சாதி, மத வேற்றுமை பார்ப்பதில்லை எனக் கூறினார். அப்படியானால், கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தை முதல்வர் தெரிவித்திருக்க வேண்டும். கிறிஸ்தவ பள்ளிகளிலும், மதரஸாகளிலும் அவர்கள் மதப்படிதான் கல்விக்கூடத்தை நடத்துகிறார்கள்.

அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளிகளில் கந்தஷஷ்டி கவசம் படிப்பதில் என்ன தவறு இருக்கிறது. இன்னும் சொல்வதானால், இதை அனைத்து பள்ளிகளிலும் கொண்டுவர வேண்டும் என்பது என் கருத்து. வி.சி.க எம்.பி ரவிக்குமார் இந்து கோயில்களிலிருந்து வரும் வருவாய் தேவையில்லை எனக் கூறமுடியுமா… அதுமட்டும் தேவை, அதன் நம்பிக்கை தேவையில்லை என்பது எப்படி நியாயமாகும். பண்பாட்டு ரீதியில் அது சரிதான்.

தமிழிசை

அண்ணாமலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தது… பொதுமேடையில் பேசுவது என்பதில் அவரவர்களுக்கென ஒரு பாணி இருக்கும். அண்ணாமலை பேசியது அவரின் பாணி. ஆனால், என்னைப் பொருத்தவரை தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம் என்பது என் கோரிக்கை. அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க-வுக்கு எப்போதும் கூட்டணி கிடையாது என அண்ணாமலை கூறியிருக்கிறார்.

ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக கருத்து சொல்வதற்கும், முடிவெடுப்பதற்கும் அவருக்கு உரிமை இருக்கிறது. பின்பு அது விவாதங்களுக்கு உட்படுத்தப்படலாம். தொண்டர்களிடம் கருத்துகள் கேட்கப்படலாம். எனவே மேடையில் மட்டுமே முடிவு செய்வது என்பது எனது அரசியல் அனுபவத்தில் சரியா என்பது என் கேள்வி… நானும் அதே கட்சியில் ஐந்தரை வருடமாக மாநிலத் தலைவராக இருந்தவள்தான். மாநிலத் தலைவராக அவரின் கருத்துகளை உறுதியாக சொல்கிறார்.

ஸ்டாலின்

ஆனால், கட்சியின் கருத்து, நிர்வாகிகளின் கருத்து எல்லாம் கேட்கப்பட்டு, அதில் ஒரு முடிவுக்கு வரலாம். மாநிலத் தலைவரின் கருத்தை, அந்தக் காலப்பொழுதில் ஏற்றுக்கொள்வதுதான் ஒரு கட்சியின் காரியக்கர்த்தாக்களின் முடிவாக இருக்க முடியும். அதனால் அதை ஏற்கிறேன். ஒருகோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கும் முடிவில் இருக்கிறோம். இப்போது எங்களின் முழு கவனம் அதில்தான் இருக்கிறது. தி.மு.க எனும் ஆலமரத்தை சாய்க்க முடியாது என ரஜினி தெரிவித்திருக்கிறார்.

தெலங்கானாவில், ஆந்திராவில் இருந்த பெரும் ஆலமரங்கள் சாய்ந்திருக்கின்றன. அரசியலில் அசைக்க முடியாத ஆலமரம் என்பதெல்லாம் இல்லை. ரஜினி தி.மு.க-வில் ஒரு புயலை உருவாக்கியிருக்கிறார். அமைச்சர் துரைமுருகன் வீட்டின் முன்னால் இருந்த மணலில் சிறுமியாக கபடி விளையாடியவள் நான். அவர் எனக்கு அவ்வளவு சீனியர். ஆனால், நான் ஒரு கட்சியின் தலைவராகி, இரண்டு மாநிலங்களின் ஆளுநராகி, தற்போது கட்சியை பலப்படுத்தும் இடத்தில் இருக்கிறேன்.

அண்ணாமலை – தமிழிசை

ஆனால் அவர்… அதனால்தான் வாரிசு அரசியலை பா.ஜ.க எதிர்க்கிறது. நாடாளுமன்றத் தலைவர் பதவியை டி.ஆர். பாலுவிடமிருந்து பிடுங்கி கனிமொழியிடம் கொடுக்கப்பட்டது. துரைமுருகனுக்கு வரவேண்டியதை பிடிங்கி ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டது, அவருக்குப் பிறகான சீனியர்களுடையதை பிடுங்கி உதயநிதி ஸ்டாலினிடம் கொடுக்கப்படுகிறது. எனவே, தி.மு.க தொண்டர்கள் இதை சிந்திக்க வேண்டும். பா.ஜ.க-வில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது என்பதை இப்போது மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

கோபாலபுரத்தின் வீட்டிலிருந்து கோயிலுக்கு பூஜைப் பொருள்கள் சென்றிருப்பதை பார்த்திருக்கிறேன். வீட்டில் இருப்பவர்களின் நம்பிக்கைக்கு மரியாதை கொடுக்கும் ஸ்டாலின் நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு மரியாதை கொடுப்பதில்லை என்பதுதான் எனக்கு இருக்கும் வருத்தம்…” எனக் கலகலப்புடன் பேட்டியளித்திருக்கிறார்.