தூய்மைப் பணியாளர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தினாரா பேரூராட்சி தலைவர்?- குற்றச்சாட்டும் விளக்கமும்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் இருக்கிறது ஜெகதளா பேரூராட்சி. அந்த பேரூராட்சியின் தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த பங்கஜம் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், பேரூராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளர்களை தனது வீட்டில் பாத்திரம் கழுவுவது உள்ளிட்ட பணிகளுக்கு ஈடுபடுத்தி வருகிறார் என ஜெகதளா பேரூராட்சி கவுன்சிலர்கள் சிலர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

ஜெகதளா பேரூராட்சி

“சமூகநீதி, சமத்துவம் என பேசும் தி.மு.க-வைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர் ஒருவரின் செயலை பாருங்கள்!” என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய ஜெகதளா பேரூராட்சியின் 8 – வது வார்டு கவுன்சிலர் (அ.தி.மு.க) சாஜி, “பேரூராட்சியின் தூய்மைப் பணியாளர்களை தனது வீட்டிற்கு வரச் சொல்லி வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி வருகிறார். மறுப்பு தெரிவிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு வேறு பகுதிகளில் கடுமையான பணிகளைச் செய்ய உத்தரவிடுகிறார். இது மோசமான செயல். அதனால்தான் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாட்ஸ்அப்பில் பகிர்ந்தோம்” என்றார்.

தூய்மைப் பணியாளர்கள்

இது குறித்து ஜெகதளா பேரூராட்சித் தலைவர் பங்கஜத்தை தொடர்பு கொண்டு பேசினோம். “என்னுடைய சகோதரரும் இதே பேரூராட்சியின் முன்னாள் தலைவராகப் பதவி வகித்தவர்தான். அப்போதிலிருந்தே தூய்மைப் பணியாளர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்போதும் எங்கள் வீட்டிற்கு வந்த தூய்மைப் பணியாளர்கள் உணவு சாப்பிட்டுவிட்டு அவர்களின் உணவு பாத்திரங்களை கழுவும்போது எதிரிகள் சிலர் ரகசியமாக புகைப்படங்கள் எடுத்து அவதூறு பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு” என முடித்துக் கொண்டார்.