முத்தமிழ் முருகன் மாநாடு: `ஆலய வழிபாடுகளில் தமிழ் முதன்மை… பக்தர்கள் விரும்பும் ஆட்சி!’ – ஸ்டாலின்

பழனியில் இன்று நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டு மாட்டைத் தொடங்கிவைத்தார். அப்போது, பேசிய ஸ்டாலின், “இந்து சமய அறநிலையத் துறை சார்பில் `அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதற்கு என்னுடைய வாழ்த்துகள். கலைஞர் ஆட்சிக் காலத்தில் நடந்த மக்கள் பணிகளை பார்த்து தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், திருமுருக கிருபானந்த வாரியாரும் பாராட்டினார்கள். இன்றைய ஆட்சியை நீங்கள் எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அதன் அடையாளம்தான், பழனியில் நீங்கள் எல்லோரும் கூடி இருப்பது.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு

அந்த வகையில், பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக கழக ஆட்சி நடைபெற்று வருகிறது. பழனி, திருத்தணி, திருச்செந்தூர், மருதமலை, குமாரவயலூர், சிறுவாபுரி, காந்தல் ஆகிய ஏழு முருகன் திருக்கோயில்களில் பெருந்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகிற பக்தர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், பக்தர்கள் நலனை மனதில் வைத்து, கோயில் வளர்ச்சிப் பணிகளை தொடங்கி இருக்கிறோம். வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக 58.77 ஏக்கர் நிலங்களை 58 கோடியே 54 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கி கையகப்படுத்துகின்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அறுபடை வீடு முருகன் திருக்கோயில்களில் 789 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 251 பணிகள் நடைபெற்று வருகிறது. அறுபடை வீடு அல்லாத முருகன் திருக்கோயில்களில் 277 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 588 பணிகள் நடைபெற்று வருகிறது. 69 முருகன் திருக்கோயில்களின் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு விழா நடத்தப்பட்டிருக்கிறது.

எனவே, ஏதோ திடீர் என்று பழனியில் மாநாடு நடத்தவில்லை. இப்படிப்பட்ட பணிகளை எல்லாம் செய்து கொண்டுதான் பழனியில் இந்த மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கும். அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை. அதுமட்டுமல்ல, அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாகவும் செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் என்பது எல்லார்க்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாக கொண்டது. அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறையையும் மிகச் சிறப்பாக நடத்திக்கொண்டு வருகிறோம்.

முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க-வின் தாய் அமைப்பான நீதிக்கட்சி காலத்தில்தான் பழுத்த ஆத்திகரான அன்றைய முதலமைச்சர் பனகல் அரசரால் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பண்பாட்டுச் சின்னங்களான கோயில்கள் முறையாக பாதுகாக்கப்படவேண்டும், முறையாக செயல்படவேண்டும் என்ற நோக்கத்துடன் அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இன்று சீரோடும், சிறப்போடும் கோயில்கள் இயங்க அடித்தளம் அமைத்தது அந்தச் சட்டம்தான். கடந்த மூன்றாண்டு காலத்தில் 1,355 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள். 3 ஆயிரத்து 776 கோடி ரூபாயில் 8 ஆயிரத்து 436 திருக்கோயில்களில் திருப்பணிகள். 50 கோடி ரூபாயில் கிராமப்புற ஆதிராவிடர் கோயில்களில் திருப்பணிகள் நடத்தி இருக்கிறோம்.

இப்போது நான் சொன்னதெல்லாம் மிகவும் குறைவு. நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகளை, இந்து சமய அறநிலையத்துறை மூலமாக ஒரு புத்தகமாகவே போடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து சிலவற்றைத்தான் நான் இப்போது சொல்லியிருக்கேன். பழனியில் நடக்கின்ற இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு ஆன்மீக வரலாற்றிலேயே மிகச் சிறப்பான இடத்தைப் பெறும்.

முதல்வர் ஸ்டாலின்

நீதியரசர்கள், மகா சன்னிதானங்கள், ஆன்மீக பெரியவர்கள், சமய சொற்பொழிவாளர்கள், தமிழ் இலக்கிய அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள், பாடகர்கள் என்று பல்துறை அறிஞர்கள் பழனியில் சங்கமிக்கின்ற இந்த மாநாட்டுக்கு என்னுடைய வாழ்த்துகள். ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெறவேண்டும். திருக்கோயில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாகும். அறத்தால் உலகம் நன்றாகும்” என்று கூறினார். இதற்கிடையில், சீர்காழி சிவசிதம்பரம் முருகன் பாடலை பாடுவதை கேட்டதும், முதல்வர் எழுந்து நின்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88