பெங்களூரை சேர்ந்த ரமேஷ் பாபு முடி திருத்தும் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கி இன்றைக்கு 400 ஆடம்பர கார்களுடன் ரூ.1200 கோடிக்கு அதிபதியாகி இருக்கிறார்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் முன்னேறி இருப்பார்கள். இன்றைக்கு கோடீஸ்வரர்களாக இருப்பவர்களிடம் அவர்களது அனுபவத்தை கேட்டால் அவர்களில் அதிகமானோர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பர். பெங்களூரை சேர்ந்த ரமேஷ் பாபுவின் வாழ்க்கையும் அது போன்ற ஒன்றுதான். ரமேஷ் பாபு தனது 13 வயதில் வீடுகளுக்கு பேப்பர் போடுவது, பால் பாக்கெட் போடுவது என்று வாழ்க்கையை தொடங்கினார். ரமேஷ் பாபுவிற்கு 13 வயதாக இருந்த போது அவரது குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது. அவரின் தந்தை பார்பராக வேலை செய்தார். அதில் கிடைக்கும் வருமானம் வீட்டிற்கே போதுமானதாக இல்லாமல் இருந்தது.
இதனால் தனது 13 வயதில் குடும்பத்திற்கு துணை நிற்க ஆரம்பித்தார். பால் போடுவது, பேப்பர் போடுவது மட்டுமல்லாது தந்தையின் முடி திருத்தும் கடைக்கும் சென்று அந்த தொழிலையும் சிறு வயதிலேயே கற்றுக்கொண்டார். அதன் பிறகு இரவு வரை கடையில் பார்பராக வேலை செய்தார். பகலில் படித்துக்கொண்டு மாலையில் தனது தந்தையின் சலூனில் வேலை செய்து வந்தார். அப்படி படித்து டிப்ளமோ முடித்தார்.
தினமும் 16 மணி நேரம் வேலை பார்த்தார். பார்பராக இருந்து கொண்டு மேற்கொண்டு முன்னேற முடியாது என்பதை தெரிந்து கொண்ட ரமேஷ் பாபு 1993ம் ஆண்டு தன்னிடம் இருந்த சேமிப்பு பணத்தைக் கொண்டும், தனது மாமாவின் உதவியோடும் முதன் முதலில் மாருதி ஓம்னி ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்த காரை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க ஆரம்பித்தார் ரமேஷ் பாபு. வாடகைக் காருக்கு அதிக தேவை இருந்ததை தெரிந்து கொண்டு ரமேஷ் பாபு அதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். எனவே கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆரம்பித்தார். அதோடு தானே கார்களை ஓட்ட ஆரம்பித்தார்.
பெங்களூருவில் ஆடம்பர கார்களுக்கு தேவை அதிகமாக இருந்தது. இதையடுத்து 2004ம் ஆண்டு முதல் முறையாக ஆடம்பர கார்களை ரமேஷ் பாபு வாங்கி வாடகைக்கு விட ஆரம்பித்தார். ரூ.38 லட்சத்திற்கு முதன் முதலில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை வாங்கி மேல் மட்டத்து வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு விட்டார். ரமேஷ் டூர் அண்ட் டிராவல்ஸ் என்ற கம்பெனியை தொடங்கி ஆடம்பர கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆரம்பித்தார். பெங்களூருவில் ஐ.டி கம்பெனிகள் மற்றும் பி.பி.ஒ கம்பெனிகள் அதிக அளவில் இருப்பதால் ரமேஷ் பாபுவின் கார் வாடகை தொழில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது.
அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ, ஆடி, ஜாகுவார் போன்ற ஆடம்பர கார்கள் மளமளவென்று அதிகரித்தது. ஒவ்வொரு காரும் கோடிக்கணக்கான மதிப்புடையது.
ஆடம்பர வாடகை கார் துறையில் ரமேஷ் பாபு அசைக்க முடியாத நபராக உயர்ந்திருக்கிறார். ஆடம்பர கார்கள் மட்டுமல்லாது மினி பஸ்கள், வேன்கள், பழமையான கார்கள் மற்றும் பட்ஜெட் கார்களும் ரமேஷ் பாபுவின் பட்டியலில் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் ரமேஷ் பாபுவின் சொத்து மதிப்பு இன்றைக்கு ரூ.1,200 கோடியாக அதிகரித்து இருக்கிறது. ரமேஷ் பாபுவிடம் 400 ஆடம்பர கார்கள் இருக்கின்றன. பெங்களூரு முழுக்க ரமேஷ் பாபுவின் வாடகை கார்கள் ஓடுகின்றன. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முன்மாதிரியாக திகழும் ரமேஷ் பாபு இன்று நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.