“மதுரையில் இரண்டாமிடம் வந்ததை மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். இதை 2026-ல் பா.ஜ.க முதலிடம் பிடிப்பதற்கான அறிகுறியாக பார்க்கிறோம்…” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
மதுரை தெற்குத் தொகுதியில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போது, “திராவிட கட்சிகளை அகற்ற பிள்ளையார் சுழியைப் போட வேண்டும். தமிழகம், திராவிடக் கட்சிகளின் பிடியில் இருந்து வெளிவந்துள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் மொத்தமுள்ள 68,045 பூத்துகளில் 7,174 பூத்துகளில் பா.ஜ.க முதலிடமும், 18,086 பூத்துகளில் இரண்டாமிடமும் பா.ஜ.க வந்துள்ளது. இந்த 37 சதவிகித வாக்குகள் 2026-ல் 100 சதவிகிதமாக மாறும்.
மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் சு.வெங்கடேசனுக்கும், ராம ஸ்ரீநிவாசனுக்கும் வெறும் 3,000 ஓட்டுகள்தான் வித்தியாசம். இதை பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன். டாஸ்மாக் சென்று மாமூல் கேட்டு அடவடியாகச் செயல்படாமல் கடினமாக உழைத்த பூத் தலைவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
மதுரையில் இரண்டாமிடம் வந்ததை மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். இதை 2026-ல் பா.ஜ.க முதலிடம் பிடிப்பதற்கான அறிகுறியாக பார்க்கிறோம். மதுரை மக்கள் மாற்றி யோசித்ததுபோல் தமிழக முழுவதுமுள்ள மக்களும் மாற்றி யோசிப்பார்கள். பா.ஜ.க-வின் உச்சபட்ச வளர்ச்சி என்பது தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதுதான். நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணிக்கு 80 லட்சம் பேரும், பா.ஜ.க-வுக்கு மட்டும் 50 லட்சம் பேரும் வாக்களித்துள்ளனர். அ.தி.மு.க எங்களைவிட 20 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளனர். நோட்டா கட்சி என்று கிண்டல் செய்தார்கள். இன்று கூட்டணியில் 18 சதவிகிதமும், தனியாக 13 சதவிகிதமும் பெற்றுள்ளோம்.
கலைஞர் நூற்றாண்டு நாணய விழாவில் நான் கலந்துகொண்டதை பேசுகின்றனர். தி.மு.க-வுக்கு வலுவான எதிரி யாரென்று தெரியும். எதிரியாக இருந்தாலும் தகுதியான எதிரிகள் மதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு மரியாதை செலுத்தியிருக்கிறோம்.
அ.தி.மு.க, கூட்டணியில் இல்லாதபோது 2017-ல் எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டது. எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மோடி பக்கம் போய்விடுவார்கள் என நினைத்து, எம்.ஜி.ஆர் நாணயத்தை இரண்டு ஆண்டுகளாக பூட்டி வைத்து பின்பு வெளியிட்டார்கள். மோடி வந்து வெளியிட்டிருந்தால் எம்.ஜி.ஆரை வட மாநில மக்கள் பேசி இருந்திருப்பார்கள். எடப்பாடி பழனிசாமி நாணயத்தை வெளியிட்டால் அது ஜம்மு காஷ்மீரில், ஜார்கண்டில், உத்தரப்பிரதேசத்தில் யாருக்குத் தெரியும்? மதுரையைத் தாண்டினால் ஆர்.பி.உதயகுமாரைத் தெரியாது, செல்லூர் ஏரியாவை தாண்டினால் செல்லூர் ராஜூவை யாருக்கும் தெரியாது. இதுதான் அ.தி.மு.க தலைவர்களின் நிலை.
தமிழகத்தில் தி.மு.க-வுக்கு எதிரான மனநிலை உள்ளது. அ.தி.மு.க என்ன குட்டிக்கரணம் அடித்தாலும், தி.மு.க என்ன சங்கு சக்கரம் சுழற்றினாலும் பா.ஜ.க வளர்ச்சியை தடுக்க முடியாது. மோடிக்கு பின்னால் நாங்கள் திரண்டிருப்பது தி.மு.க-வை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
தமிழக மக்களிடம் திராவிட கட்சிகள் மாறிமாறி விஷ விதைகளை விதைத்திருக்கிறார்கள். திராவிட கட்சிகள் ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும், கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறார்கள். இரண்டு கட்சிகளும் மூன்றாவது அணியை உருவாக விடமாட்டார்கள். அதனால்தான் மூப்பனார், வைகோ, விஜயகாந்தை ஒழித்தார்கள். அதுபோலத்தான் பா.ஜ.க-வை ஒழிக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் திராவிட கட்சிகள் உருவாக்கி வைத்த பாதையை பா.ஜ.க தகர்த்து வருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால்தான் மக்கள் உண்மையான ஜனநாயகத்தை பார்ப்பார்கள்.
1,200 ஆண்டுகளுக்குப் பிறகு சௌராஷ்டிர மக்களுக்காக சௌராஷ்ட்ரா தமிழ் சங்கத்தை நடத்தி, மோடி பெருமை சேர்த்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய வேண்டும் என பிரதமர் நினைத்தார். மத்திய அரசு திட்டம் என்றால் அதற்கான நிலத்தைக் கொடுக்காமல் ஜவ்வு மாதிரி இழுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு எய்ம்ஸ் வர வேண்டும் என்று விரும்பவில்லை.
2017-ல் எம்.ஜி.ஆருக்கும், 2024-ல் கலைஞருக்கும் 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டது, கூட்டணிக்காக அல்ல. இங்கு உள்ள கிணற்று தவளைகளுக்கு இதை புரிந்து கொள்ள சற்று நேரமாகும்.
தமிழகத்தில் பா.ஜ.க-வை அரசியல் கட்சியாக ஏற்றுக்கொண்ட மக்கள், ஆளத்தகுந்த கட்சியாகவும் ஆக்குவார்கள். இந்த நேரத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். தலைவர்களும் தொண்டர்களும் நேர்மையாக இருக்க வேண்டும்.” என்றார்.