நெல்லை மாவட்டம், தாழையூத்து அருகேயுள்ள தென்கலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர், கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். கிருஷ்ணனின் தாய் மூக்கம்மாள் அதே ஊரில் தனியாக வசித்து வருகிறார். கிருஷ்ணனின் தங்கை மாலா, கணவனைப் பிரிந்து வாழ்வதால், தன் தாயுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
கிருஷ்ணன் அப்பகுதிகளில் நடக்கும் கட்டுமான வேலைகளுக்குச் சென்று தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அத்துடன் தன் தாய் மற்றும் தங்கையின் வீட்டுச் செலவையும் கவனித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் நெஞ்சுவலியால் இறந்தார்.
அதைக்கேட்டு பதறி ஓடி வந்த கிருஷ்ணனின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். பின்னர், சிறிதுநேரத்தில் இருவரும் வீட்டிற்குச் சென்று வருகிறோம் எனக் கூறிவிட்டு நள்ளிரவில் வீட்டிற்குச் சென்றனர். தங்களின் வாழ்கைக்கு ஆதாரமாக இருந்தவர் உயிரிழந்த துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அதிகாலையில் தாய், மகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
நள்ளிரவில் வீட்டிற்குச் சென்றவர்களைக் காணவில்லையே என உறவினர்கள் மூக்கம்மாளின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது இருவரும் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். மகன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் மகளுடன் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.