`முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி டிசம்பர் மாதத்தை தாண்டாது!’ – புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி சொல்வதென்ன?

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய, அக்கட்சியின் புதுச்சேரி எம்.பி வைத்திலிங்கம், “மத்தியில் ஆளும் பா.ஜ.க-வும், மாநிலத்தில் ஆளும் முதல்வர் ரங்கசாமியும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்க மாட்டார்கள். அதனடிப்படையில்தான் இன்னும் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றனர். சுதந்திரம் என்பது இரண்டு விதமானது.  ஒன்று பேச்சு சுதந்திரம் மற்றொன்று பொருளாதார சுதந்திரம். சம்பாதிக்கும் பெண்கள், கணவனை நம்பி இல்லாமல் குடும்பத்தை நிர்வகிக்கக்கூடிய பொருளாதார சுதந்திரத்தை பெற்றுள்ளனர். ராஜீவ் காந்தி அவர்களால்தான் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்தது. கம்ப்யூட்டரை இந்தியாவிற்கு கொண்டு வந்தது ராஜீவ் காந்திதான்.

புதுச்சேரி

அதிகாரத்தை அனைவருக்கும் பரவலாக்கி தர வேண்டும். முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் ஒரு அமைச்சர் மட்டுமே பல துறைகளை வைத்திருக்கிறார். இன்னொரு அமைச்சர் குடிமைப் பொருள் வழங்கல் துறையை மட்டுமே வைத்திருக்கிறார். அதேபோல அவர், `முன்பு போல் இனி ஊழல் நடைபெறாது’ என்று அவரே, நடைபெற்ற ஊழலை ஒப்புக் கொண்டிருக்கிறார். மற்றொரு மந்திரியிடம் கேட்டால், `நான் ரப்பர் ஸ்டாம்ப் சார். அக்கா சுந்தர் என்று ஒருவரும், இன்னொருவரும் சொன்னால்தான் கோப்புகளில் கையெழுத்து போட முடியும் என்கிறார். மத்தியில் மோடி சொல்லாமல் எதுவும் அசையாது. தனியார் கம்பெனிகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய ஆர்.எஸ்.எஸ்-காரர்களை, அரசு செயலளர்களாக நிரப்ப நினைப்பது, அரசியலமைப்பு மீது நடத்தப்படும் தாக்குதல்.

அவ்வாறு நிரப்பினால் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது. பட்ஜெட்டிற்கு அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் ஓ.பி.சி-யைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை. அதானி தவறு செய்துள்ளதாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதை விசாரிக்க செபியின் தலைவரிடம் அறிக்கை கேட்டனர். ஹிண்டன்பர்க்கோ, `அந்த கம்பெனியில் ஷேர் வைத்துக்கொண்டு முதலாளியாக இருக்கிறார்’ என்று செபி தலைவர் மீது குற்றம் சுமத்தி உள்ளது. அதனால் நாடாளுமன்ற குழுவை அமைத்து செபி தலைவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டதற்கு, பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட யாரும் பதிலளிக்க வில்லை. அதை கண்டித்தும், செபி தலைவர் மீது விசாரணை நடத்தக் கோரியும் 22-ம் தேதி அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நட த்தும்படி காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டிருக்கிறது.

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

மோடி உடைந்து போன முக்காலியில் அமர்ந்திருக்கிறார். அதில் உடைந்து போன ஒரு கால், கயிறால் கட்டப்பட்டிருக்கிறது. அது நிலையான அரசு கிடையாது. அதேபோல புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் அரசும் டிசம்பரை தாண்டுமா என்று சொல்ல முடியாது. எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் டிசம்பருக்குள் என்கின்றனர். தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கும் இரண்டு அரசுகளும் நிலையற்றவை. மக்களின் நம்பிக்கையை இழந்த, அருதிப் பெரும்பான்மை பெறாத ஆட்சிகள். அதனால் போரட்டத்த்திற்கு மட்டுமல்லாமல், தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்” என்றார்.