வங்கதேச விவகாரம்; திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு கை கொடுத்ததா? – என்ன சொல்கின்றனர் தொழில்துறையினர்

பின்னலாடை ஏற்றுமதியில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ள வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் பிரச்னை அந்நாட்டு வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக பின்னலாடை ஏற்றுமதியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிலும், குறிப்பாக இந்தியப் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் பெரும்பங்கு வகிக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.36,000 கோடிக்கும் மேல் பின்னலாடை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பின்னலாடை மற்றும் அதுசார்ந்த சுமார் 15,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருவதுடன், இந்த நிறுவனங்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

கரோனா தாக்கம், நூல் விலை உயர்வு, பணவீக்கம், ஜி.எஸ்.டி, ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரின் தாக்கம், ஐரோப்பிய நாடுகளில் மக்களிடம் வாங்கும் திறன் குறைந்தது எனப் பல்வேறு காரணங்களால் திருப்பூர் பின்னலாடைத் தொழில் கடந்த காலங்களில் பெரும் சரிவைச் சந்தித்து வந்தது. அதேவேளை அண்டை நாடான வங்கதேசத்தில் பின்னலாடை ஆடை உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளில் வங்கதேசத்தில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஜவுளித் தொழில் பெரும் வளர்ச்சியை எட்டியது. வங்கதேசம், மாதத்துக்கு ரூ. 30 ஆயிரம் கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வங்கதேச உள்நாட்டுப் பிரச்னை திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

கே.எம்.சுப்பிரமணியன்

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் பேசுகையில், “பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவைவிட வங்கதேசம் சற்று முன்னேறியுள்ளது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக வங்கதேசம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகள் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் இறங்கிவிட்டது. தற்போதுதான் நாம் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை தொடங்கியுள்ளோம்.

தற்போது, வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் பிரச்னை பின்னலாடை ஏற்றுமதியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றே தெரிகிறது. கடந்த 10 நாள்களை வைத்துப் பார்க்கும்போது, உள்நாட்டுப் பிரச்னை பின்னலாடைத் துறையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், இனிவரும் காலங்களில் வெளிநாட்டவர்கள் வங்கதேசத்தில் முதலீடு செய்வதை கண்டிப்பாக தவிர்ப்பார்கள். இந்த முதலீடு இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல், வங்கதேச பின்னலாடை ஏற்றுமதியின் முக்கிய வாடிக்கையாளர்களான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் திருப்பூரை இரண்டாவது சாய்ஸாக வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் தற்போது புத்துயுர் பெற்றுள்ளது. நமக்கு வரும் ஆர்டர்களே போதுமான அளவு இருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.400 கோடிக்கு கூடுதலாக ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றுள்ளது” என்றார்.

முத்துரத்தினம்

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) தலைவர் எம்.பி.முத்திரத்தினத்திடம் பேசினோம்.” தொடக்கத்தில் வங்கதேச ஆர்டர்கள் திருப்பூர் பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாகத்தான் பேசப்பட்டது. ஆனால், களநிலவரம் அவ்வாறு இல்லை. வங்கதேச தலைநகர் டாக்காவில் மட்டுமே போராட்டம் நடைபெற்றது. பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்கள் புறநகர்ப் பகுதியில்தான் இயங்குகிறது. அங்கெல்லாம் ராணுவப் பாதுகாப்புடன் தொழில் நிறுவனங்கள் இயங்குவதாக செய்திகள் வெளிவருகிறது.

இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசத்தில் ஆடை உற்பத்திச் செலவு 10-15 சதவீதம் குறைவு. இதனால், வங்கதேச ஆர்டர்கள் இந்தியாவை நோக்கி திரும்புவதற்கு என்று எதிர்பார்க்க முடியாது. வங்கதேசம் – ஐரோப்பிய நாடுகள் இடையேயான, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், 2025ம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு பிறகு, இந்தியாவைத் தேடி வர வாய்ப்புள்ளது. அப்படியே இருந்தாலும், தமிழகத்தில் மின்கட்டண உயர்வைப் பார்க்கும்போது, அந்த நிறுவனங்கள் திருப்பூருக்கு வருவார்களா? என்பது சந்தேகம்தான். திருப்பூரின் தற்போதைய பின்னலாடைத் தொழில் போதுமான அளவு நடைபெற்று வருகிறது. இதை தடையில்லாமல் செய்வதற்கான உதவிகளை தமிழக அரசு செய்தாலே போதுமானது” என்றார்.