இந்தியாவில் நிர்பயா தொடங்கி, தற்போது இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை – கொலை வரை, பெண்கள் மீது பாலியல் ரீதியிலான அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், “ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் 2019 மற்றும் 2024-ம் ஆண்டு தேர்தல்களின்போது இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட 4,809 எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் பிரமாணப் பத்திரங்களில், 4,693-ஐ ஆய்வு செய்தது. அதில், 151 சிட்டிங் எம்.பி – எம்.எல்.ஏ-க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வழக்கு இருப்பது தெரியவந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டுள்ள 16 எம்.பி-க்கள், 135 எம்.எல்.ஏ-க்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
இந்தப் பட்டியலில் மேற்கு வங்கத்தில் 25 சிட்டிங் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதால், மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திராவில் 21 எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களும், ஒடிசாவில் 17 எம்.பி-க்கள், எம்.எல்.ஏ.க்களும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கை எதிர்க்கொண்டிருக்கின்றனர்.
இவர்களில் 14 சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள், 2 சிட்டிங் எம்.பி-கள் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376-ன் கீழ் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை எதிர்க்கொண்டிருக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படலாம்.
அரசியல் கட்சிகள் அடிப்படையில் கவனித்தால், பா.ஜ.க (54 எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள்) அதிக எண்ணிக்கையில் முன்னணி வகிக்கிறது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 23, தெலுங்கு தேசம் கட்சி 17 பேர் பெண்கள் தொடர்பான வழக்குகளில் சிக்கியிருக்கின்றனர். பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிலும் தலா 5 எம்.பி-க்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
அரசியல் கட்சிகள் கிரிமினல் பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு, குறிப்பாக பாலியல் வன்கொடுமை போன்ற பெண்களுக்கு எதிரான பிற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு முடிவுகள் வலியுறுத்துகிறது. எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான நீதிமன்ற வழக்குகளை விரைவாக விசாரிக்க நீதிமன்றத்தையும், இது போன்ற குற்றச்சாட்டுகளுடன் தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களை தவிர்க்குமாறு வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.