தெலங்கானா: `ஆட்சி போனாலும் ஆணவம் போகவில்லை!’ – ராஜீவ் காந்தி சிலை நிறுவுவதில் முதல்வர் Vs KTR மோதல்!

தெலங்கானாவில் மாநில தலைமைச் செயலகம் முன்பு, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலையை நிறுவ ஆளும் காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருப்பதற்கு, எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும், பி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவுக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்திருக்கிறது.

ராஜீவ் காந்தி

இது குறித்து கே.டி.ராமாராவ், “பி.ஆர்.எஸ் தனது 10 ஆண்டுகால ஆட்சியில், காங்கிரஸ் தலைவர்களின் பெயர்கள் அல்லது இடங்களின் பெயர்களை மாற்றுவது பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், ராஜீவ் காந்தியின் சிலையை நிறுவ காங்கிரஸ் தேர்வு செய்திருக்கும் இடம், தெலங்கானா தாலி (Thalli) சிலையை நிறுவ ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட இடம்.

கே.டி.ராமாராவ்

இன்னும் நான்கு ஆண்டுகளில் சந்திரசேகர ராவ் தலைமையில் பி.ஆர்.எஸ் அரசு மீண்டும் அமையும். அப்போது, ராஜீவ் காந்தியின் சிலை அங்கிருந்து மரியாதையுடன் அகற்றப்பட்டு, அவர்கள் விரும்பும் இடத்தில் வைக்கப்படும். அதோடு, தெலங்கானா தாலி சிலை அதற்கான மீண்டும் இடத்தில் நிறுவப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், கே.டி.ராமாராவ் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “என்னுடைய வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள் ச்சீப் முதலைச்சர். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும் நாளில், அம்பேத்கர் செயலகத்தின் சுற்றுப்புறத்திலிருக்கும் குப்பைகளை அகற்றுவோம். உங்களைப் போன்ற ஒரு டெல்லி குலாம், தெலங்கானாவின் சுயமரியாதையையும் பெருமையையும் புரிந்துகொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது” நேற்று ட்வீட் செய்திருந்தார்.

தெலுங்கனா முதல்வர் ரேவந்த் ரெட்டி

இதற்கு, புஞ்சகுட்டாவில் நேற்று நடைபெற்ற ராஜீவ் காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சியில் கடுமையாக எதிர்வினையாற்றிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, “நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் சிலையை நிறுவ முன்வந்தால், அதை அகற்றுவோம் என்று சொல்கிறார்கள். ஆட்சியை இழந்தபோதிலும் அவர்களின் இன்னும் ஆணவம் அப்படியே இருக்கிறது. தன்னுடைய தந்தையின் (சந்திரசேகர ராவ்) சிலையை நிறுவ அவர் (கே.டி.ராமாராவ்) விரும்புகிறார். ஆனால், மாநில இயக்கம் என்ற பெயரில் தெலங்கானாவைக் கொள்ளையடித்த குடிகாரர்களுக்கும், திருடர்களுக்கும் தலைமைச் செயலகத்தில் இடமில்லை” என்றார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளாக தெலங்கானா தாலி சிலையை ஏன் நிறுவவில்லை என பி.ஆர்.எஸ்ஸை விமர்சித்த ரேவந்த் ரெட்டி, சோனியா காந்தி பிறந்த நாளான டிசம்பர் 9-ல், தலைமைச் செயலகத்தில் தெலங்கானா தாலி சிலை நிறுவப்படும் என்று உறுதியளித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88