“பால் தாக்கரே ராஜீவ் காந்தியை எதிர்த்தார்; ஆனால் ED, CBI-ஐ அனுப்பவில்லையே..!” – உத்தவ் தாக்கரே

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் நிகழ்ச்சி மும்பையில் நேற்று மாலை காங்கிரஸ் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் எதிர்க்கட்சி தலைவர்கள் சரத் பவார், உத்தவ் தாக்கரே, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே,”காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஒன்றை ஒன்று எதிர்த்துள்ளன. ஆனால் ஒரு போதும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டது கிடையாது. எனது தந்தை காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்ததுண்டு. அதற்காக ராஜீவ் காந்தி அமலாக்கப்பிரிவு அல்லது சி.பி.ஐ யை அனுப்பியது கிடையாது. நாங்கள் பா.ஜ.க வின் அதிகார ஜிகாத்திற்கு எதிராக போராட இணைந்துள்ளோம். மற்ற மதங்களை நியாயமற்ற வகையில் நடத்தும் பா.ஜ.கவின் இந்துத்துவாவில் எனக்கு உடன்பாடு கிடையாது”என்று தெரிவித்தார்.

இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே,”காங்கிரஸ் கட்சியால்தான் அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் திட்டத்தை பா.ஜ.க அரசு திரும்ப பெற்றுக்கொண்டது.

மல்லிகார்ஜுன் கார்கே

பா.ஜ.க-வுக்கு இப்போது பெரும்பான்மை பலம் இருந்திருந்தால் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை பணியில் நியமித்து இருப்பார்கள். பா.ஜ.க விஷம் போன்றது. அதனை முயற்சித்துப்பார்க்கவோ அல்லது சுவைத்துப்பார்க்கவோ கூடாது. தூக்கி எறியப்படவேண்டியது அவசியம். மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆட்சியை பிடிப்பது அவசியம். கூடுதல் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றால்தான் ராஜ்ய சபைக்கு கூடுதல் உறுப்பினர்களை அனுப்ப முடியும். நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் விவசாய சட்டம், தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றிவிட்டனர்.

இப்போது பா.ஜ.க பெறும்பான்மையை இழந்துவிட்டதால் வக்ஃபு போர்டு நில மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பபட்டு இருக்கிறது. நரேந்திர மோடி அரசு மைனாரிட்டி அரசாக இருப்பதால் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளத்தின் துணையோடுதான் ஆட்சி நடத்தவேண்டியநிலையில் இருக்கிறது”என்றார். இதில் சரத்பவாரும் பேசினார். இக்கூட்டத்திற்கு பிறகு சட்டமன்ற தேர்தல் குறித்து மூன்று கட்சி தலைவர்களும் கலந்து ஆலோசனை நடத்தினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88