ரஷ்யாவை திருப்பி அடிக்கும் உக்ரைன்… முன்னேறுகிறதா உக்ரைன் ராணுவம்?! – என்ன நடக்கிறது?

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஆண்டுகள் கடந்து போர் நீடித்துவருகிறது. ஆரம்பத்தில் பலத்த அடி வாங்கிய உக்ரைன், தற்போது ரஷ்யா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவின் முக்கிய இலக்குகளைக் குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலமாகவும், ஏவுகணைகள் மூலமாகவும் உக்ரைன் தாக்குதல் நடத்திவருகிறது.

ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்யாவின் எல்லையில் ரஸ்தோ என்ற இடத்தில் விமானம் மூலமாக குண்டுவீசி தாக்குதல் நடத்தியது உக்ரைன். அதில், 10-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தனர். உக்ரைன் படைகள் தற்போது குர்ஸ்க் என்ற பகுதியைத் தாக்கிவருகிறார்கள்.

இதற்கு அமெரிக்காவிடமிருந்து பெற்ற ஹிமர்ஸ் என்ற ஏவுகணையை உக்ரைன் பயன்படுத்திவருகிறது. அதன் மூலமாக, ரஷ்யாவில் முக்கியமான பாலம் ஒன்றை உக்ரைன் தாக்குதல் நடத்தி தகர்த்திருக்கிறது. உக்ரைன் விமானப்படை தளபதி வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில், சீயம் ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கும் பாலத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. இந்தப் பாலத்தின் மீது உக்ரைன் படைகள் ஏற்கெனவே நடத்திய தாக்குதல் தோல்வியடைந்த நிலையில், அமெரிக்காவிடமிருந்து பெற்ற ஏவுகணை மூலமாக நடத்திய தாக்குதலில் பாலம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷ்யப் படைகளுக்கு இந்தப் பாலம் பெரிதும் பயன்பட்டுவந்த நிலையில், அதைக் குறிவைத்து உக்ரைன் அழித்திருக்கிறது. குர்ஸ்க் பிராந்தியத்தில் தங்களுடைய படைகளை பலப்படுத்துவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.

2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் தொடங்கியது. முதன் முறையாக இப்போதுதான் ரஷ்யாவுக்குள் உக்ரைன் இவ்வளவு தூரம் நுழைந்து தாக்குதல் நடத்திவருகிறது. உக்ரேனின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையைத் தொடர்ந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

புதின்

இரண்டு நாடுகளின் படைகளும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன. சில இடங்களில் எதிரிகளை நோக்கி, சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் முன்னேறியிருப்பதாக உக்ரைன் ராணுவத் தலைவர் ஒலக்சாண்டர் சிர்ஸ்கி தெரிவித்திருக்கிறார். எல்லையிலிருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் இருக்கும் மலா லோகன்யா என்ற கிராமத்தில் பலரை சிறைப்பிடிப்போம் என்று நம்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

1,000 சதுர கிலோ மீட்டர் அளவிலான ரஷ்ய நிலப்பரப்பை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் தாக்குதல்களைத் தொடர்ந்து, தனது எல்லைப்பகுதியில் இரண்டு லட்சம் மக்களை ரஷ்யா வெளியேற்றியிருக்கிறது. குர்ஸ்க் பிராந்தியத்தை மட்டுமன்றி, பெல்கோரோட் மாகாணத்திலும் அவசர நிலையை ரஷ்யா அமல்படுத்தியிருக்கிறது.

ரஷ்யா – உக்ரைன் போர்

எல்லைப் பகுதியில் உக்ரைனின் ஊடுருவலைத் தடுக்க முடியாமல் ரஷ்யா தடுமாறுகிறது. அதே நேரத்தில், உக்ரேனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய படைகள் முன்னேறிவருகின்றன. செர்ஹிவ்கா உள்ளிட்ட உக்ரைனின் நகரங்கள் சிலவரைற்ற கடந்த சில வாரங்களில் ரஷ்யா கைப்பற்றியிருக்கிறது.

கிழக்கு உக்ரைனைச் சேர்ந்த போக்ரோவ்ஸ்க் நகரம் ரஷ்யப் படையினரிடம் வீழும் நிலையில் இருக்கிறது. சுமார் 53 ஆயிரம் பேர் அந்தப் பகுதியில் வசித்துவரும் நிலையில், அங்கிருந்து மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

உக்ரைன் பாக்முட் நகரம்

உக்ரைனுக்கு மிகப்பெரிய ஆதரவை அமெரிக்கா அளித்துவருகிறது. உக்ரைனின் பாதுகாப்பு உதவிகள் என்ற பெயரில் பல பில்லியன் டாலர்களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியிருக்கிறது. ரஷ்யாவுக்கு எதிராக போர் புரிவதற்காக உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர்கள் உதவி செய்வதற்கான அனுமதியை அமெரிக்க நாடாளுமன்றம் சில மாதங்களுக்கு முன்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88