ராஷ்டிரபதி பவனில் உள்ள பரிசுப் பொருள்கள் ஏலம்… ரூ.2,700 – ரூ.4 லட்சம் வரையில் ஆன்லைனில் பெறலாம்..!

நம் நாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகளில் பெரும்பாலும், பாரம்பர்யம் மற்றும் கலாசாரம் சார்ந்த பொருள்கள்தான் இடம்பெறும். மேலும், வெளிநாட்டுத் தலைவர்கள் வழங்கும் பரிசுப் பொருள்களில், அவர்கள் நாட்டுக் கலாச்சாரம் கொண்ட பொருள்கள் இடம்பெறும். அப்படி, நம் குடியரசுத் தலைவருக்குக் கிடைக்கும் பொருள்கள் அனைத்தும் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும். பின்னர், அது குறிப்பிட்ட ஒரு நாளில் ஏலம் விடப்படும். ஆனால், இப்போது முதன்முறையாக இந்த ஏலம் ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ளது. இதை யார் வேண்டுமானாலும் ஏலத்தில் பெற்றுக்கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஏலம் விடப்படும் பொருள்கள்

இ- உபஹார் (E-Upahaar) என்ற ஆன்லைன் போர்டல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சுமார் 250 கலைப் பொருள்கள் ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ளன. ஏலம் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தற்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கிடைத்த பரிசுப் பொருள்கள் மட்டும் இல்லாமல், முன்னாள் குடியரசுத் தலைவர்களான ஏ.பி.ஜே அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல், பிரனாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் பதவிக் காலத்தில் கிடைத்த பரிசுப் பொருள்களும் ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ளன.

கடல் சிப்பிகளால் ஆன சுபாஷ் சந்திரபோஸின் ஓவியம்

இந்த ஏலத்தில் பழங்குடியினரின் நகைகள், சிலைகள், சிற்பங்கள் உள்ளிட்ட நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ.2,700 முதல் ரூ.4,02,500 வரைக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஏலத்தில் சுபாஷ் சந்திரபோஸின் ஓவியம்தான் மிக உயர்ந்த பரிசுப் பொருளாக ரூ.4 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க கடல் சிப்பிகளால் ஆனது.

இந்தப் பரிசுப் பொருள்களை வாங்க நினைப்பவர்கள் முதலில் இ- உபஹார் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதில் பதிவு செய்த பின்னர் யார் வேண்டுமென்றாலும் தங்களுக்கு விருப்பமான பொருள்களுக்கான ஏலத் தொகையை தெரிவிக்கலாம். இப்படி ஏலம் எடுத்து பொருள்கள் வாங்குபவர்களுக்கு ராஷ்டிரபதி பவன் தரப்பில் இருந்து ஒரு சான்றிதழும் வழங்கப்படும். இந்த ஏலம் மூலம் வரும் பணம் குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் தொண்டு நோக்கத்துடன் செயல்படும் நிறுவனங்களுக்கு செலுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏலம் விடப்படும் பொருள்கள்

கடந்த காலங்களில் பிரதமர் மோடிக்கு கிடைத்த பிரத்யேக பரிசுப் பொருள்களை ஏலம் விடுவதை கலை சேகரிப்பாளர்கள் ஆர்வமாக வாங்கி வந்தனர். அதைத் தொடர்ந்துதான் தற்போது குடியரசுத் தலைவருக்குக் கிடைக்கும் பொருள்களும் ஏலத்தில் விடப்படுகின்றன. ஏலத்தில் வைக்கப்பட்டுள்ள பொருள்களில், கலாசார முக்கியத்துவம் வாய்ந்த சில பொருள்களைப் பற்றி பார்க்கலாம்.

ஏலம் விடப்படும் பொருள்கள்

விவித்தா கா அம்ரித் மஹோத்சவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு வழங்கப்பட்ட ஒரு பட்டு பொன்னாடை மிகவும் சிறப்பு வாந்ததாகக் கருதப்படுகிறது. அது தங்கஸ் என்ற திபெத்திய பாரம்பர்ய முறைபடி கைகளால் வரையப்பட்ட ஓவியம் கொண்ட ஆடை. அதில் பச்சை, நீலம் மற்றும் பீச் நிறங்கள் கலந்து தாமரை சிம்மாசனத்தில் புத்தர் அமர்ந்திருப்பது போல் வரையப்பட்டுள்ளது. இது மரியாதையை குறிப்பதாக கூறப்படுகிறது. இதன் விலை 1,02,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான மர வேலைப்பாடுகளுடன் கூடிய ஞானம் மற்றும் அறிவின் உலகளாவிய சின்னமான ஆந்தை சிலை, வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளார் கல்லூரிக்கு சென்றிருந்தபோது, டிஎஸ்எஸ்சியின் கமாண்டண்ட் லெப்டினட் ஜெனரல் கஹ்லோன், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பரிசாக வழங்கியது. ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ள இதன் விலை 9,200 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட தங்க நிற காமதேனு சிற்பம், நம் நாட்டின் வளமான கலாசார பாரம்பர்யத்தை பிரதிப்பலிக்கிறது. பசுக்களின் ஆன்மிக மற்றும் மத முக்கியத்துவத்தை உள்ளடக்கி, அதன் உடலில் ஏராளமான விவரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இச்சிலை. இது அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. இதன் விலை 8,800 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, பல்வேறு மாநிலங்களின் பாரம்பர்யத்தை பறைசாற்றும் வகையில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய 250 பொருள்கள் ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.