Gold: தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்வு! காரணம் என்ன?

தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தைக் கண்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.6,565-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.52,520-க்கும் விற்பனை ஆனது. அதற்கு அடுத்த நாள் தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,670-க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.53,360-க்கும் விற்பனை ஆனது. இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் பண்டிகை காலம் வரவிருக்கும் நிலையில், தங்கம் விலை உயர்வது மக்களிடையே அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானி

தங்கம் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்குகிறார் சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானி.

  • “மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நடந்துவரும் போர், ரஷ்ய-உக்ரைன் போர் – இவை இரண்டிலுமே இதுவரை எந்தவொரு சமாதான உடன்படிக்கையும் ஏற்படவில்லை.

  • அமெரிக்காவில் இருந்து வரும் தரவுகளின் படி, அமெரிக்க பொருளாதாரம் படிப்படியாக புத்துயிர் பெற்று வருகிறது. மேலும் அமெரிக்க பெடரல் வரும் செப்டம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் தங்களது வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

  • உலக சந்தையில் தங்கம் விலை தனது பழைய உச்ச விலையை தாண்டியுள்ளதால், ‘இன்னும் தங்கம் விலை உயரலாம்’ என முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கம் பக்கம் திருப்பியுள்ளனர்.

இவை தான் தற்போதைய தங்கம் விலை உயர்வுக்கான காரணங்கள் ஆகும்” என்று விளக்குகிறார்.