ரௌடி சுள்ளான் அகிலனை சுட்டு பிடித்த போலீஸ்; `என்கவுன்ட்டர்’ என வீடியோ பதிவிட்ட தங்கை – என்ன நடந்தது?

பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளம் வயது ரௌடியான சுள்ளான் அகிலன், காலில் சுடப்பட்டு கைதுசெய்யப்பட்ட சம்பவம், சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அவர் சகோதரி முன்கூட்டியே இன்ஸ்டாவில் பதிவிட்டது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுள்ளான் அகிலன்

சிவகங்கை அருகே காளையார்கோயிலில் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் எஸ்.ஐ குகன் உள்ளிட்ட காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வாகனத்தில் வந்த பிரபல ரௌடி சுள்ளான் அகிலன், வாகனச் சோதனைக்கு ஒத்துழைக்காமல், தன்னிடமிருந்த ஆயுதங்களால் எஸ்.ஐ குகனைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்துள்ளார்.

அப்போது அங்கிருந்த இருந்த இன்ஸ்பெக்டர் ஆடிவேல், தற்காப்புக்காக சுள்ளான் அகிலனைச் சுட்டுப் பிடித்துள்ளார். அதன் பின்பு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சுள்ளான் அகிலன், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுள்ளான் அகிலன்

காயமடைந்த எஸ்.ஐ குகன், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் சிவகங்கையில் குற்றவாளிகள் போலீஸால் சுட்டுப் பிடிக்கப்பட்ட இரண்டாவது சம்பவமாகும், இது.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுள்ளான் அகிலன். 23 வயதாகும் இவர்மீது, 8 கொலை வழக்குகள் உட்பட 20-க்கும் மேலான குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஜாமீனில் வெளியே வந்துள்ள சுள்ளான் அகிலனின் நடவடிக்கையை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில்தான் காலில் சுடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் அகிலனின் தங்கை, இன்ஸ்டாவில் பதிந்துள்ள வீடியோவில், ‘என் அண்ணன் சிறு சிறு தவறுகள் செய்ததாக போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்தனர். தற்போது கோயம்புத்தூரில் வேலை செய்து வரும் நிலையில், போலீஸார் பிடித்து என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டுள்ளனர்’ என்று பேசியுள்ளார். பதிவுசெய்த சில நாள்களிலேயே காளையார்கோயில் போலீஸார் அகிலனை காலில் சுட்டுப் பிடித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.