மதுரை, ஆரப்பாளையம் மண்டல ஆவின் அலுவலகத்தில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஊழியர்கள் 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பதாக மதுரையைச் சேர்ந்த ஆவின் பால் முகவர் ரூபன் என்பவர் பேசிய ஆடியோ சமீபத்தில் சமூக ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கிறார்கள் என்ற பிரச்னை இப்போதுதான் ஒருவழிக்கு வந்துள்ள நிலையில் ஆவின் பால் முகவரின் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.
“மக்கள் தருகிற 10, 20, 50 ரூபாய் தாள்களை அப்படியே கொண்டு வந்துதான் ஆவின் மண்டல அலுவலகத்திலுள்ள ஆக்சிஸ் வங்கி ஊழியர்களிடம் செலுத்துகிறோம். ஆனால், வங்கி ஊழியர்களோ 100, 200, 500 தாளாகத் தந்தால்தான் வாங்குவோம். இதை ஆவின் நிர்வாகத்திலும் தெரிவித்துவிட்டதாக கூறி பணத்தை வாங்க மறுக்கிறார்கள். நாங்கள் சில்லறை பணத்தை எங்கு போய் 100, 200, 500 ரூபாய் தாள்களாக மாற்றுவது. இந்திய அரசாங்கம் அடித்த பணத்தை வாங்க மறுப்பது எப்படி சரியாகும்?” என்று ஆவின் முகவர் ரூபன் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில், “மதுரை மாவட்டத்தில் பழங்காநத்தம், அண்ணாநகர், ஆரப்பாளையம், பி.பி.குளம், மத்திய மண்டலம் என 5 மண்டலங்களில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் முகவர்கள் வாயிலாக தினசரி சுமார் 1.90 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. அப்படி விநியோகம் செய்ய கொள்முதல் செய்யும் ஆவின் பாலுக்கான தொகையை முதல் நாளே ஆவினுக்கு செலுத்த வேண்டும். பால் முகவர்கள் செலுத்தும் பணத்தை வசூலித்து, ஆவினுடைய வங்கி கணக்கில் வரவு வைப்பதற்கு வசதியாக மேற்கண்ட 5 மண்டல அலுவலகங்களிலும் ஆவின் ஏற்பாட்டில் ஒப்பந்த அடிப்படையில் ஆக்சிஸ் வங்கி ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை ஆரப்பாளையத்திலுள்ள மண்டல அலுவலகத்தில் பணம் செலுத்த வரும் பால் முகவர்களிடம் கடந்த சில நாள்களாகவே ஆக்சிஸ் வங்கி ஊழியர்கள் 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து, 500, 200,100 ரூபாய் நோட்டுகளை மட்டும்தான் வாங்க முடியும் என்று கெடுபிடி செய்து வந்தனர். 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததோடு, இதனை மதுரை ஆவின் பொது மேலாளர் உத்தரவின் பேரில்தான் செயல்படுத்துவதாக ஆக்சிஸ் வங்கி ஊழியர்கள் கூறியிருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இதைக் கண்டித்து ஆவின் பால் தேவைக்கான தொகையை பால் முகவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செலுத்த மறுத்ததால் கொஞ்சம் இறங்கி வந்த ஆவின் நிர்வாகம், அன்று மட்டும் 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை வாங்க சொல்லியுள்ளது.
பொதுமக்கள், சில்லறை கடைகள், தேநீர் கடைகள், உணவகங்களுக்கு அதிகாலையிலிருந்தே விநியோகம் செய்யும்போது பெரும்பாலும் 10, 20, 50 ரூபாய் நோட்டுகளும் 1, 2, 5, 10 நாணயங்களை பொதுமக்களும், வணிகர்களும் வழங்கி வருகின்றனர்.
ஏற்கெனவே நாணயங்களை வாங்க மறுத்து வரும் நிலையில் 10, 20, 50 ரூபாய்த் தாள்களை குப்பையிலா கொட்ட முடியும் என்பதையும்..? குறிப்பிட்ட நேரத்திற்குள் பால் முகவர்கள் பணம் செலுத்த தவறினால் அவர்களுக்கான பால் விநியோகத்தை மறுநாள் ஆவின் தங்கு தடையின்றி வழங்குமா..? இந்திய அரசால் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களையும், நாணயங்களையும் வங்கிகளோ, வணிக நிறுவனங்களோ வாங்க மறுப்பது சட்டவிரோதம் என ரிசர்வ் வங்கி பலமுறை எச்சரிக்கை செய்துள்ளது. இந்நிலையில் தற்போது பால் முகவர்களிடமிருந்து 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினே வாங்க மறுப்பது மத்திய அரசின் உத்தரவை மீறும் செயல். இது போன்ற செயல்பாடுகளை ஆவின் நிர்வாகமோ அல்லது வங்கி நிர்வாகமோ தொடர்ந்து கடைபிடிப்பது சட்டவிரோதம். வருங்காலங்களில் ஆவின் மற்றும் வங்கி நிர்வாகம் இது போன்று நடந்து கொண்டால் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிமன்றத்தை நாடும் என்பதை எச்சரிக்கையாகவே பதிவு செய்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நாயக்கர் புதுத்தெருவிலுள்ள ஆக்சிஸ் வங்கி கிளை மேலாளர் கௌதமிடம் கேட்டபோது, “எந்த நிறுவனமானாலும் தாங்கள் செலுத்தும் தொகையை குறிப்பிட்ட டினாமினேஷனில் செலுத்த வேண்டும் என்பது வங்கிக்கும் அந்த நிறுவனத்திற்கும் இருக்கும் ஒப்பந்தம். அந்த டினாமினேஷன் வரம்பை மீறும்போது அதற்குண்டான சார்ஜ் போடப்படும். ‘தங்கள் நிறுவனம் டினாமினேஷன் வரம்பை தாண்டி செல்கிறது. அதற்கான சார்ஜ் போடப்படும். இல்லையென்றால் பணம் வாங்குவதை நிறுத்திக் கொள்வோம்’ என்று ஆவின் நிறுவனத்திற்கு கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பிவிட்டோம். ஆவின் தரப்பும் அதைப் புரிந்துகொண்டு தற்போது வரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
மதுரையிலுள்ள ஆவினின் 5 மண்டலங்களில் தற்போது வரை பிரச்னையும் வரவில்லை. ஆனால், ஆரப்பாளையம் மண்டலத்தில் மட்டும்தான் பிரச்னை வந்துள்ளது. 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் வாங்க மாட்டோம் என்று பொதுமக்களிடம் ஆக்சிஸ் வங்கியில் சொன்னதாக பொய்யான தகவலை ஆவின் பால் முகவர்கள் மக்களிடையே பரப்பிவிட்டனர். இது உண்மை அல்ல. நீங்களேகூட சில்லறை நோட்டுகளையோ, கிழிந்த நோட்டுகளையோ வங்கியில் கொடுத்து மாற்றச் சொல்லி சோதனை செய்யலாம். வாங்க முடியாது என்று வங்கி ஊழியர்கள் சொன்னால் தாராளமாக புகார் அளிக்கலாம். பொது மக்களுக்கு சேவை செய்யத்தான் அனைத்து வங்கிகளும் உள்ளன. இதைத்தான் ஆர்.பி.ஐ-யும் கூறுகிறது. அதே நேரம், எங்களிடம் கணக்கு வைத்துள்ள ஒரு நிறுவனமாக இருக்கும்போது அதற்கென விதிமுறைகளும் நிபந்தனைகளும் (டேர்ம்ஸ் அண்டு கண்டிஷன்ஸ்) உள்ளன. இதைத்தான் நாங்கள் ஆவின் நிறுவனத்திற்கும் பின்பற்றுகிறோம். இது ஆரப்பாளையம் மண்டலத்திலிருக்கும் பால் முகவர்கள் சிலர் பரப்பிய தவறான தகவல்” என்றார்.
ஏற்கனவே பல்வேறு புகார்களுடன் செயல்பட்டு வரும் மதுரை ஆவின் நிர்வாகம், இதுகுறித்து எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.