கழுகார்: ஆள் தூக்கும் படலம்…. பதறும் கொங்கு மண்டல சீனியர்கள் முதல் கமிஷனை வசூலிக்க மூவர் குழு வரை!

நெல்லை மேயர் சரவணன் பதவியேற்ற நாளில் தொடங்கிய பஞ்சாயத்து, அவர் பதவி விலகிய பிறகாவது ஓயும் என்று எதிர்பார்த்தது தி.மு.க தலைமை. ஆனால், கிட்டு என்ற ராமகிருஷ்ணன் புதிய மேயராகத் தேர்வுசெய்யப்பட்ட பிறகும் பஞ்சாயத்து ஓய்வதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. காரணம், 10-ம் தேதி நடந்த மேயர் பதவியேற்பு விழாவுக்கு மத்திய மாவட்டப் பொறுப்பாளர் மைதீன் கான், நெல்லை மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலருக்கும் மரியாதை நிமித்தமாகக்கூட மேயர் தரப்பு தகவல் சொல்லவில்லையாம்.

மாறாக, மாநகராட்சிக்கு வெளியே இருக்கும் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ அப்துல் வஹாப் உள்ளிட்டோர் முன்னிலையில் பதவியேற்பு நடந்திருக்கிறது. “மரியாதைக்குக்கூட எங்களை அழைக்கவில்லை. பதவியேற்பு விழாவின்போது அப்துல் வஹாப்பை வாழ்த்தி அவருடைய ஆதரவாளர்கள் கோஷமிடுகிறார்கள்” எனக் கொதிக்கும் மைதீன் கான் தரப்பு, இது தொடர்பாக தலைமைக்கும் புகார் அனுப்பியிருக்கிறதாம். ‘மறுபடியும் முதல்ல இருந்தா?!’ என தலைமைக் கழக ஆட்களே தலையில் கைவைத்துவிட்டார்களாம்!

இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்துக்காக நெல்லைக்குச் சென்றிருக்கும் சசிகலா, “தென்காசி மாவட்டம்போல, இதுவும் சொதப்பிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று தன் ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டாராம். உடனே அந்த மாவட்டத்தில் பெரிய பொறுப்பில் இருக்கும் நிர்வாகியைத் தொடர்புகொண்ட அவர்கள், “உங்களைத்தான் சேலத்துக்காரர் மதிக்க மாட்டேங்குறாரே… இன்னமும் ஏன் அவர் பக்கம் இருக்கீங்க… சின்னம்மா நெல்லைக்கு வரும்போது வந்து பாருங்க…” என அழைப்பு விடுத்திருக்கிறார்கள். “ஏற்கெனவே ஓ.பி.எஸ் அணியிலிருந்து வந்தவர்தானே என்று என்னைச் சந்தேகமாகப் பார்க்கிறார்கள்.

சசிகலா

இதில் நீங்கள் வேறயா?” என்று பதறிப்போய்விட்டாராம் அந்த நிர்வாகி. கூடவே, “இந்தச் சுற்றுப்பயணத்தில் சசிகலா தரப்பு அ.தி.மு.க கொடியையோ, சின்னத்தையோ பயன்படுத்தத் தடைசெய்ய வேண்டும்” என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்துவிட்டாராம். “வரலைன்னா வரலைன்னு சொல்லிட்டுப் போகவேண்டியதுதானே… தென்காசியிலேயே யாரும் கொடிகட்டக் கூடாதுன்னு சொல்லலை… இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?!” என்று கடுகடுக்கிறதாம் சசிகலா தரப்பு.

அமைச்சரவை மாற்றம், மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் என அறிவாலயமே பரபரத்துக்கொண்டிருக்கும் சூழலில், தங்களின் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவும் பதவியில் இல்லாதவர்கள் தங்களுக்கான இடத்தைப் பிடிக்கவும் எதேதோ செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். கொங்கு மண்டல தி.மு.க புள்ளிகளோ, அ.தி.மு.க-வில் அதிருப்தியோடு இருக்கும் நிர்வாகிகளையும், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களையும் தி.மு.க-வுக்குத் தூக்க தீயாய் வேலை செய்கிறார்களாம்.

அதற்குத் தலையாட்டியிருக்கும் அ.தி.மு.க புள்ளிகள் சிலர், “கொஞ்சம் டைம் கொடுங்க. எங்க கட்சியில பெரிய அளவுல நிர்வாகிகள் மாற்றம் இருக்கும்னு சொல்றாங்க. என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு முடிவெடுக்கிறோம்” என்று கால அவகாசம் கேட்டிருக்கிறார்களாம். இதையறிந்து பதறிப்போன கொங்கு மண்டல சீனியர்கள், தங்கள் மந்தையைக் காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள் ர.ர-க்கள்!

தலைநகர் மாநகராட்சியில் புதிய சாலைகள் அமைக்கவும், சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கவும் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் சமீபத்தில் டெண்டர் விடப்பட்டிருக்கிறது. இந்த டெண்டர்களை எடுத்த 15-க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்களிடம் மூவர் குழு ஒன்று கறாராக கமிஷன் வசூலித்துவிட்டதாம். “அந்த மூவர் குழு, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் கமிஷனுக்கான முழுத்தொகை அல்லது அட்வான்ஸ் தொகையை வாங்கியதற்கான ஆதாரங்களை மாநகராட்சி மேலிடத்திடம் சமர்ப்பித்த பிறகுதான் ஒப்பந்தங்களில் கையெழுத்தே போடப்பட்டிருக்கிறது. ஆட்சி மாறினாலும் ஃபார்முலா மட்டும் மாறவில்லை” எனக் கிசுகிசுக்கிறார்கள் ரிப்பன் மாளிகை அதிகாரிகள்!

ஆகஸ்ட் 12-ம் தேதிவரை திட்டமிடப்பட்டிருந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை மூன்று நாள்கள் முன்னதாகவே முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது மத்திய அரசு. இதன் பின்னணியை விசாரித்தால், “அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க், செபி தலைவர் மீதும், அதானி குழுமத்தின்மீதும் மீண்டும் ஒரு மோசடிப் புகாரைத் தெரிவிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது, உளவுத்துறை மூலம் மத்திய அரசுக்கு முன்கூட்டியே தெரியவந்திருக்கிறது. ‘இந்தப் புகார் வெளியானால் எதிர்க்கட்சியினர் கேள்விகளால் துளைத்து எடுத்துவிடுவார்கள்.

ஹிண்டன்பர்க்

எதிர்க்கட்சிகள் ஸ்கோர் செய்ய நாமே ஏன் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்?’ என நினைத்தே கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொண்டார்கள். கூட்டத்தொடரை முடிப்பது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்துக்குச் செல்லும் வரை உறுப்பினர்கள் யாருக்கும் சொல்லப்படவில்லை. கூட்டத்தொடர் முடியப்போகிறது என்பது வெள்ளிக்கிழமையன்று சபைக்குச் சென்ற பிறகே எங்களுக்கே தெரியவந்தது” எனக் கடுகடுக்கிறார்கள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88