இந்தியாவில் வைரம் வர்த்தகம் மற்றும் பட்டை தீட்டும் தொழில் குஜராத் மாநிலம் சூரத்தில்தான் அதிக அளவில் நடைபெறுகிறது. சூரத்தில் பட்டை தீட்டப்படும் வைரங்கள் மும்பைக்கு கொண்டு வந்து சீனா, அமெரிக்க நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் வைர மார்க்கெட் பிரத்யேகமாக இருக்கிறது. இந்த மார்க்கெட்டில் குஜராத்தியர்கள் அதிக அளவில் அலுவலகம் வைத்திருந்தனர்.
ஆனால் மும்பைக்கு ஏன் வைரத்தை கொண்டு வரவேண்டும் என்று நினைத்த குஜராத் வியாபாரிகள் ஒன்றிணைந்து சூரத்தில் சர்வதேச தரத்தில் வைர வளாகம் ஒன்றை கோலாகலமாக கட்டியுள்ளனர். அதனை பிரதமர் நரேந்திர மோடி வந்து திறந்து வைத்தார். உடனே மும்பையை சேர்ந்த வைர வியாபாரிகள் பலரும் தங்களது அலுவலகத்தை சூரத்திற்கு மாற்றினார். ஆனால் ஒரு ஆண்டுக்குள் சூரத் மார்க்கெட் வியாபாரிகளுக்கு சாதகமாக இல்லை என்பதை அனைவரும் தெரிந்து கொண்டனர்.
சூரத்திற்கு அலுவலகத்தை மாற்றிய பெரிய வைர நிறுவனங்கள் மீண்டும் தங்களது அலுவலகத்தை மும்பைக்கே மாற்றியது. சூரத்தில் வைர ஏற்றுமதிக்கு உகந்த சூழ்நிலை இல்லை. குறிப்பாக விமான சேவை போதுமானதாக இல்லை. அதோடு வெளிநாட்டு வியாபாரிகளும் அதிக அளவில் மும்பைக்கு மட்டும் வருகின்றனர். இது போன்ற காரணத்தால் சூரத்திற்கு சென்ற வைர வியாபாரிகளுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. தற்போது சூரத்தில் தயாராகும் வைரத்திற்கு ஏற்றுமதி ஆர்டர்களும் வெகுவாக குறைந்துள்ளது. சூரத் மட்டுமல்லாது குஜராத் முழுவதும் 500-க்கும் அதிகமாக சிறு மற்றும் குறு வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகள் இருக்கிறது. இத்தொழிற்சாலைகளில் 70 முதல் 75 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு தயாராகும் வைரம் சூரத் மற்றும் மும்பையில் உள்ள வைர ஏற்றுமதியாளர்களிடம் கொடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
95 சதவீத வைரம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஏற்றுமதி வெகுவாக குறைந்திருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-பாலஸ்தீன போர் போன்றவையும் வைர ஏற்றுமதி வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எனவே விலை சரியாகும் வரை தற்காலிகமாக வைர பாலீஸ் செய்வதை நிறுத்த சூரத் வைர நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. வரும் 18-ம் தேதியில் இருந்து 10 நாள்களுக்கு வைர உற்பத்தி நிறுத்தப்படுகிறது. வழக்கமாக தீபாவளியையொட்டி இது போன்ற ஒரு பிரேக் கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது மார்க்கெட்டில் மந்த நிலை நிலவுவதால் இப்போதே உற்பத்திக்கு பிரேக் கொடுக்க வைர நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இது குறித்து சூரத் வைர நிறுவன அசோசியேசன் தலைவர் ஜெகதீஷ் கூறுகையில், “உலகில் நிலவும் அசாதாரண நிலை காரணமாக வைர மார்க்கெட் மற்றும் ஜூவல்லரி மார்க்கெட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு வைர வர்த்தகம் 2.25 லட்சம் கோடி அளவுக்கு நடைபெற்றது. ஆனால் இது 2023-ம் ஆண்டில் 1.50 லட்சம் கோடியாக குறைந்துவிட்டது. கடந்த இரண்டு ஆண்டில் தொடர்ந்து வைர வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது”என்றார். அமெரிக்கா மற்றும் ஜி-7 நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்துள்ளன. ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா வைரம் ஏற்றுமதி செய்யப்பட்டது.
தற்போது தடையால் ரஷ்யா கச்சா வைரத்தை ஏற்றுமதி செய்யவில்லை. அதோடு சர்வதேச வைர சுரங்க நிறுவனங்கள் கச்சா வைர உற்பத்தியை 15 சதவீதம் அளவுக்கு குறைக்க முடிவு செய்துள்ளன. இதனால் சூரத்தில் வைர தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே சூரத்தில் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்துள்ளனர். எனவே சூரத் வைர தொழிற்சங்கம் தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் ஒன்றை தொடங்கி இருக்கிறது. இந்த ஹெல்ப்லைனுக்கு 1600 பேர் போன் செய்து வேலை இழந்திருப்பதாகவும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.