Senthil Balaji: செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; தேதி குறிப்பிட்டு விசாரணையை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்டதாக தற்போதைய தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். வருடக்கணக்கில் இந்த வழக்கு விசாரணை நீண்டு கொண்டிருக்கும் நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கேட்டு தொடர்ச்சியாக முயன்று வருகிறது. அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபனையும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜி

இதற்கிடையில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, அவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனுவை, நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது.

அப்போது அமலாக்கத்துறையிடம் உச்ச நீதிமன்றம், காட்டமாகச் சில கேள்விகளை எழுப்பியது. அதைத் தொடர்ந்து இரு தரப்பு வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

உச்ச நீதிமன்றம் – SC, ST உள் இட ஒதுக்கீடு

இந்த நிலையில் இன்று (14-08-2024) செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல்முறையீடு மனு வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வியுடன் அரசியல் ஆர்வலர்கள் வழக்கை ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.

இன்று காலை தொடங்கிய இந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “மூன்று வழக்குகளில் தொடர்புடைய செந்தில் பாலாஜியை மீதமிருக்கும் இரண்டு வழக்குகளில் விசாரிக்கப் போகிறீர்களா… அந்த வழக்குகளில் 2,000-க்கும் மேற்பட்டோர் தொடர்பிருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் அனைவரையும் விசாரிக்கப் போகிறீர்களா?” என அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணையில் இந்தக் கேள்விகளுக்கு அமலாக்கத்துறை விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு வழக்கு விசாரணையை, பிற்பகலுக்கு மாற்றக் கோரி அமலாக்கதுறை கோரிக்கை முன்வைத்தது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர். அதைத் தொடர்ந்து பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்டதால், வழக்கை மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு, எந்ததெந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும் என்பதை அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக, விரிவான விசாரணை 20-ம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்து, ஒத்திவைத்தனர்.