“நான் மோடி அரசை விமர்சிப்பதால் எனது கணவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்” – சுப்ரியா சுலே காட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனது பெரியப்பா மகனும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித் பவார் மனைவியை பாராமதி தொகுதியில் தோற்கடித்தார். இத்தேர்தல் தோல்வி அஜித் பவாருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தேர்தல் தோல்வியை தொடர்ந்து சுப்ரியா சுலேவுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்ரியா சுலேயின் வாட்ஸ் ஆப் ஹேக் செய்யப்பட்டது. ஹேக் செய்த நபர் 400 டாலர் கேட்டு மிரட்டினார். இது நடந்து அடுத்த சில நாட்களில் சுப்ரியா சுலேயின் கணவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இது குறித்து சுப்ரியா சுலே அளித்துள்ள பேட்டியில், ”நான் பிரதமர் நரேந்திர மோடி அரசை விமர்சனம் செய்ததால் எனது கணவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. எத்தனை முறை நோட்டீஸ் வந்திருக்கிறது என்ற விபரத்தை தயாரிக்கும்படி எனது கணவரிடம் தெரிவித்துள்ளேன். நாங்கள் அதிகாரத்தில் இருந்த போது நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை. இப்போது எனது கணவர் அந்த நோட்டீஸ்களுக்கு பதிலளித்துக்கொண்டிருக்கிறார். மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததால்தான் மகாராஷ்டிரா அரசு பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு பணம் சப்ளை செய்து கொண்டிருக்கிறது.

பணம் கொடுப்பதன் மூலம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கின்றனர். புதிய திட்டங்கள் மூலம் உங்களுக்கு பணம் கொடுப்பதாக அரசு நினைக்கிறது. ஆனால் அந்த பணம் முழுவதும் நீங்கள் வரியாக கொடுத்த பணமாகும். விவசாயிகளின் உரம், டிராக்டர் போன்ற விவசாயிகள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி.வரி வசூலிக்கப்படுகிறது”என்றார்.

மேலும் சுப்ரியாவை மத்திய அரசு பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் கண்காணிப்பதாக தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) குற்றம் சாட்டி இருக்கிறது. இது குறித்து அக்கட்சி செய்தி தொடர்பாளர் மகேஷ் அளித்த பேட்டியில், ”மத்திய அரசு மக்களவை தேர்தலில் பாராமதியில் தோல்வி அடைந்த பிறகு சுப்ரியா சுலே பேசுவதை பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் கண்காணித்து வருகிறது.” என்றிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88