பல்வேறு வழக்குகளில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்படும் பலரை, ஒரு முறைகூட விசாரிக்கப்படாமல் நீதிமன்ற காவல் என்ற பெயரில் வருடக்கணக்கில் சிறையில் அடைத்துவைப்பது தொடர்ச்சியாக நடந்துவருகிறது. இதற்கு உதாரணமாக, கடந்த 2020-ல் டெல்லியில் நடைபெற்ற கலவரத்துக்கு மூளையாகச் செயல்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் உபா சட்டத்தின் கீழ் (UAPA – சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்) கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ஜே.என்.யு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் தலைவர் உமர் காலித், எத்தனையோ முறை ஜாமீன் கோரியும் நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டு வருகிறார்.
அதேபோல், கடந்த ஆண்டு பிப்ரவரியில் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் (PMLA) சிறையில் அடைக்கப்பட்ட ஆளும் ஆத்மியைச் சேர்ந்த மனீஷ் சிசோடியாவிடம், ஒன்றரை வருடமாக ஒரு விசாரணை கூட நடத்தப்படாமலிருந்த நிலையில், ஒரு வழியாக உச்ச நீதிமன்றமே அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், தகுதியான வழக்குகளில் நீதிமன்றங்கள் ஜாமீன் மறுப்பது சட்ட மீறல் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. முன்னதாக, 2022-ல் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் உறுப்பினர்களுக்கு வீடு வாடகைக்கு விட்ட ஜலாலுதீன் கான், உபா உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜலாலுதீன் கானுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, “குற்றச்சாட்டுகள் தீவிரமானதாக இருந்தாலும், சட்டத்தின்படி ஜாமீன் வழக்கை பரிசீலிப்பது நீதிமன்றத்தின் கடமை. ஜாமீன் என்பது விதி (Rule). அதோடு, சிறை விதிவிலக்கு என்பது சிறப்புச் சட்டங்களுக்கும் பொருந்தும். எனவே, தகுதியான வழக்குகளில் நீதிமன்றங்கள் ஜாமீன் மறுக்கத் தொடங்கினால், அரசியலமைப்பு பிரிவு 21-ன் கீழ் அளிக்கப்பட்ட உரிமைகளை மீறுவதாக அமையும்” என்று தனது உத்தரவில் தெரிவித்தது.