மகாராஷ்டிரா தேர்தல்: `கூடுதல் தொகுதிகள் வேண்டும்…’ – உத்தவுக்கு காங்கிரஸ், சரத் பவார் நெருக்கடி!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல், அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு அரசியல் கட்சிகளிடையே தீவிரம் அடைந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடித்ததுபோல், இப்போதும் விரைந்து முடிக்க எதிர்க்கட்சிக் கூட்டணியான மகாவிகாஷ் அகாடி முயன்று வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் முதல்வராகும் ஆசையில் இருக்கிறார் உத்தவ் தாக்கரே. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, தனது விருப்பத்தைத் தெரிவித்துவிட்டு வந்தார்.

ஆனால் முதல்வர் விவகாரத்தில் காங்கிரஸ் இறங்கி வர மறுத்துவிட்டது. அதே போன்று சரத் பவாரும் இவ்விவகாரத்தில் இறங்கி வர மறுக்கிறார். தேர்தலில் எந்த கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சிக்கு முதல்வர் பதவி என்பதில் காங்கிரஸும், சரத் பவாரும் உறுதியாக இருக்கின்றனர். அதோடு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகள் சிவசேனா (உத்தவ்)வை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று, உத்தவ் தாக்கரேயிக்கு நெருக்கடி கொடுத்து இருக்கின்றன. மேலும் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் கட்சிகளில் இருந்த எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலானவர்கள் கட்சி உடைந்த பிறகு எதிரணிக்குச் சென்றுவிட்டனர்.

உத்தவ்

இதனால் சிவசேனா (உத்தவ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகள் பலவீனமடைந்துவிட்டதாகக் கூறி, காங்கிரஸ் தங்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்று கூறி வருகிறது. இதே போன்று சரத் பவாரும் தங்களது கட்சி மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்பதாகக் கூறி, சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதனால் உத்தவ் தாக்கரே விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டு அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்வர் பதவியை கைப்பற்றிவிடலாம் என்று உத்தவ் தாக்கரே நினைத்தார். ஆனால் கூட்டணிக் கட்சிகள் இரண்டும் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் கூடுதல் தொகுதிகள் கேட்டு வருகின்றன.

நானா பட்டோலே

2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட சிவசேனா 56 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த 154 தொகுதிகளை அந்தந்த கட்சிகளுக்கு ஒதுக்குவது என்று மூன்று கட்சிகளும் முடிவு செய்துள்ளன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் வெற்றி பெற்ற 154 தொகுதிகள் போக எஞ்சியுள்ள 134 தொகுதிகளை மூன்று கட்சிகளும் உள்ளூரில் இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளன. கடந்த இரண்டு அல்லது மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் சிவசேனா 50 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த தொகுதிகளை அந்தந்த கட்சிகள் கேட்கலாம் என்று பேச்சுவார்த்தையில் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதோடு ஒவ்வொரு கட்சிக்கும் செல்வாக்குள்ள பகுதியை அந்தந்த கட்சிக்கே விட்டுக்கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு விதர்பா, மராத்வாடா மற்றும் மும்பையின் குறிப்பிட்ட பகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது. சிவசேனாவிற்கு மும்பை, கொங்கன், தானே பகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி மேற்கு மகாராஷ்டிரா, வடக்கு மகாராஷ்டிராவில் செல்வாக்குடன் விளங்குகிறது.

நீண்ட நாள்களாக மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகளிடம் விட்டுக்கொடுத்து வந்துள்ளது. எனவே இம்முறை முதல்வர் பதவியைப் பிடித்துவிடவேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக இருக்கிறது.

சரத் பவார்

மற்றொரு புறம் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணியிலும் தொகுதிப் பங்கீட்டை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 100 தொகுதிகளையும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 80 தொகுதிகளையும் கேட்டுக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க-வும் 160 தொகுதிகளில் போட்டியிட இலக்கு நிர்ணயித்திருக்கிறது.