Thangalaan: `பரமக்குடியிலிருந்து கஷ்டப்பட்டு வந்து இந்தக் கல்லூரியில் படித்தவர் என் அப்பா’ – விக்ரம்

திரைப்பட ரசிகர்களாலும் பல்வேறு தரப்பினராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான்.

விக்ரமுடன் மாளவிகா, பார்வதி

இத்திரைப்படத்தின் புரோமோஷன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது. நடிகர் விக்ரம், டேனியல், நடிகை மாளவிகா மோகன், பார்வதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். படக்குழுவினரை கல்லூரி மாணவர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாகத்துடன் வரவேற்றனர். கல்லூரி மாணவர்களை இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொண்டு பின்பு பாதுகாப்பு வேலியைத் தாண்டி குதித்து மாணவர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் மாஸாக ஒரு ரவுண்டு அடித்து விட்டு மீண்டும் மேடைக்கு வந்து பேசத் தொடங்கினார் விக்ரம்.

“பரமக்குடியிலிருந்து கஷ்டப்பட்டு மதுரைக்கு வந்து இந்த அமெரிக்கன் கல்லூரியில் படித்தவர் என் அப்பா. அதுமட்டுமல்ல, சம்மர் வெக்கேஷன் வந்தா என் தொல்லை தாங்காம என்னை இங்குள்ள அத்தை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்” என்று தன் மதுரை அனுபவத்தைக் கூறியவர், பின்பு தங்கலான் படத்தில் வரும் அறைகூவல் சத்தத்தை கூச்சலிட்டுக் காண்பித்து அதேபோல் அரங்கத்தில் உள்ள அனைத்து மாணவர்களையும் உற்சாகக் கூச்சலிட வைத்தார்.

அமெரிக்க்ன கல்லூரி முதல்வருடன்

செய்தியாளர்களிடம் பேசும்போது, “மதுரை என்றாலே விடுமுறை, மீனாட்சியம்மன் கோயில், அழகர்கோயில் பாட்டு, கொண்டாட்டம் என அனைத்தும் நினைவுக்குவரும். மதுரை சாப்பாட்டை என்ஜாய் பண்ணுவேன்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் இறங்கி வேலை செய்ய வேண்டும். இந்த படத்தில் டேனிக்கு அதிகளவு காயம் ஏற்பட்டது. அதன்பின் ஆபரேஷன் செய்து மூன்று மாதம் ரெஸ்ட் எடுத்து சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார், இந்தப் படத்துக்காக உயிரைக் கொடுத்து நடித்தார். டேனி பேசும் இங்கிலீஷ் எனக்கே தெரியும்.அவர் அனைவரோடும் கனெக்ட் ஆகி இந்தியராகவே மாறிவிட்டார். மாளவிகா யார் என்பது இந்தப் படம் மூலம் தெரியவரும். ஆக்ஷன் சீன் முழுவதும் மாளவிகா சிறப்பாக நடித்தார். பார்வதியும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

தங்கலான் இந்திய சினிமாவிற்கு புதுவிதமான கதையாக இருக்கும். இந்தப் படம் வாழ்க்கையைப் பார்த்தது போல இருக்கும், மக்களுக்கு புரியும் வகையில் புதிய சப்தங்களை, புதிய கருவிகளைப் பயன்படுத்தி இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்

எனக்கு பிடித்த இயக்குனர் பா.ரஞ்சித்தோடு பணி புரிந்தது மகிழ்ச்சி. தங்கலான் படத்தில் உலக சினிமா தரமும் நமது மண்வாசனையும் இருக்கும். இந்தப் படக்குழுவில் பணியாற்றிய லைட்மேன் வரை அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தை தயாரிக்க ஞானவேல் தைரியத்தோடு வந்தார். கே.ஜி.எப், காந்தாரா, என கன்னடத்திலும், மலையாளத்திலும் தற்போது சிறப்பான படங்கள் வந்துள்ளது. அதுபோல இந்த படம் தேசிய அளவிலான படமாக இருக்கும். நம்ம வரலாறு பேசும் படம் என நீங்கள் பெருமைப்படுவீர்கள்.எந்தப் படத்தில் நடித்தாலும் அதற்கேற்ப மன ரீதியாக தயார்படுத்தி அந்த கேரக்டரை உள்வாங்கிவிடுவேன். எல்லா ரசிகர்களுமே எனது ரசிகர்கள் தான். டப்பிங் இல்லாமல் ஒரிஜினிலாக ஸபாட்டில் பேசியது கடும் சிரமமாக இருந்தாலும் வித்தியாசமாக இருந்தது. காதல் கதையுடன் கூடிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன்” என்றார்

மாணவர்களின் உற்சாக கொண்டடடம்

மாளவிகா மோகன் தங்கலான் படத்தைப் பற்றிய தன்னுடைய அனுபவத்தைக் கூறிவிட்டு கபாலி பட பாணியில் ‘மகிழ்ச்சி’ என்று ஸ்டைலாக கூறி முடித்தார்.

இறுதியாகப் பேசிய பார்வதி கூறியதாவது “பா.ரஞ்சித்தின் மற்ற படங்கள் அனைத்தையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். மெட்ராஸ், கபாலி, காலா, நட்சத்திரம் நகர்கிறது… இப்படங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கு ஒருவிதமான பார்வை இருக்கும். ஆனால், இது எல்லாவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக தங்கலான் இருக்கும். உங்களோட ஆதரவு இந்தப் படத்துக்கு நிச்சயம் வேணும். உங்களோட கருத்துகளை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எல்லா சோஷியல் மீடியாவிலும் கவனிச்சு கேட்டுகிட்டுதான் இருப்பேன்” என்றார்.

படக்குழுவினர் பேசி முடித்துவிட்டு மாணவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டு நிகழ்வை முடித்தபோது மாணவர்கள் தங்கள் போனில் உள்ள பிளாஷ் லைட்டை ஒளிர விட்டு தஙகலான் படக்குழுவினரை உற்சாகப்படுத்தினர்.