தென்காசி அருகே பஞ்சாயத்து கணக்கு வழக்குகளை கேட்ட விவகாரத்தில், கவுன்சிலரின் கணவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “தென்காசியை அடுத்த மேலகரம் டவுன் பஞ்சாயத்தில் தி.மு.க. பேரூர் கழகச் செயலாளராக பணியாற்றுபவர் சுடலை. இவரின் உறவினர்தான் மேலகரம் டவுன் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்த 3-வது வார்டு தி.மு.க.கவுன்சிலர் பூமாவின் கணவர் சண்முகம். இவர் தி.மு.க-வில் மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். பஞ்சாயத்து விவகாரம் தொடர்பாக சுடலைக்கும்- சண்முகத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-08-11/6b3opcjz/IMG_20240811_063233.jpg)
இந்த நிலையில், பஞ்சாயத்தில் வரவைக் காட்டிலும், செலவு அதிகமாக இருப்பதை அறிந்த சண்முகம், அதைச் சுட்டிக்காட்டி சேர்மனிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். இது பிடிக்காத சுடலை, ‘உன்னிடம் பேச வேண்டும்’ எனக் கூறி சண்முகத்தை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அழைத்திருக்கிறார். அதன்பேரில் பஞ்சாயத்து அலுவலகம் சென்ற சண்முகத்திற்கு முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்து சண்முகம் ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். அவர் மேலகரம் பஜாரில் நின்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த சுடலை, தன்னுடைய டூவீலரில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சண்முகத்தின் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-08-11/o5fxhw2z/IMG_20240811_063257.jpg)
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சண்முகம் உடனடியாக மேலகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்” எனக் கூறினர். பஞ்சாயத்து கணக்கு வழக்கு பிரச்னைக்காக, தி.மு.க. பிரமுகரை சொந்தக் கட்சியை சேர்ந்தவரே கத்தியால் குத்திய சம்பவம், தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.