Manish Sisodia: `வாய்மையே வெல்லும்’ – மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்… மேடையில் கண்ணீர்விட்ட அதிஷி!

ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெறும் டெல்லியில், மதுபான கொள்கை ஊழல் தொடர்பாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைதுசெய்து சிறையிலடைத்து. அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் அவரை கைதுசெய்தது. இதில், மணீஷ் சிசோடியா தரப்பிலிருந்து பலமுறை ஜாமீன் கோரிக்கை விடுக்கப்பட்டும் அவை நிராகரிக்கப்பட்டன.

மணீஷ் சிசோடியா – உச்ச நீதிமன்றம்

சுமார் ஒன்றரை வருடமாக நீதிமன்ற காவலிலேயே இருக்கிறார். இந்த நிலையில், ஜாமீன் வழங்க மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மணீஷ் சிசோடிய தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று விசாரித்தது.

அப்போது, “காலவரையறையின்றி அவரை சிறையில் வைத்திருப்பது அவரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். ஜாமீனை தண்டனையாக நிறுத்தி வைக்கக் கூடாது என்பதை நீதிமன்றங்கள் மறந்துவிட்டன. மேலும், இந்த வழக்கில் 493 சாட்சிகள் பெயரிடப்பட்டிருப்பதால் விசாரணை தற்போது முடிவடையும் சாத்தியம் இல்லை. அதோடு, இவர் சமூகத்தில் ஆழமான வேர்களைக் கொண்டிருப்பதால் தப்பியோடுவதற்கான பயம் இல்லை” என்று கூறிய உச்ச நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவை வரவேற்ற டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.

துர்கா பார்க் அருகே நசிர்பூர் சாலையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அதிஷி, “டெல்லி கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்திய தலைவர் பொய் வழக்கில் 17 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஏழைக் குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளித்ததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று உண்மை வென்றுவிட்டது. டெல்லி மாணவர்கள் வென்றிருக்கின்றனர். இது உண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி” என்று கூறி மேடையிலேயே கண்ணீர் சிந்தினார்.

மேலும், `வாய்மையே வெல்லும்’ என்று ட்வீட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அதிஷி.