சென்னையில், அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர பொதுஇடங்கள், நீர்நிலை பகுதிகளில் கட்டடக் கழிவுகள் கொட்டினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை மாநகரை தூய்மையாக வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மாநகராட்சி நிர்வாகம். அதன் ஒருபகுதியாக, இரவு நேரங்களிலும் மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை முழுவதும் கடந்த 10 நாள்களில் மட்டும் 6,310 டன் கட்டட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. கட்டடக் கழிவுகளால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. மழைக்காலங்களில் வடிகால்களில் மழைநீர் வெளியேற இடையூறாக, கட்டடக் கழிவுகள் அடைத்துக் கொள்கின்றன. ஆகவே அனுமதித்த இடங்கள் தவிர பொதுஇடங்கள், நீர்நிலைகள் அருகே கட்டடக் கழிவுகள் கொட்டினால் ரூ.500 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் வெங்கடேசனிடம் பேசியபோது, “சென்னை மாநகராட்சி எச்சரிக்கை செய்வதெல்லாம் இருக்கட்டும். முதலில் மாநகராட்சி நிர்வாகம் கழிவுகளை எங்கே கொட்டுகிறது? அனுமதிக்கப்பட்ட இடங்களில்தான் கழிவுகளை கொட்டுகிறதா? அப்படியிருந்தால் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளிட்ட பகுதிகள் ஏன் இந்த லட்சணத்தில் இருக்கிறது. முன்பு பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக இப்படித்தான் அபராதம் அது இது என கிளம்பியது. பிறகு அமைதியாகிவிட்டது.
பில்டிங் கான்ட்ராக்டர்கள், பழைய கட்டடங்களை இடிப்போர்தான் சென்னையில் அதிக கட்டடக் கழிவுகளை கொட்டுகின்றனர். இவர்கள் எல்லோரும் அரசியல் பின்னணி கொண்டவர்கள்தான். இவர்களையெல்லாம் மாநகராட்சியால் தண்டித்துவிட முடியுமா? மாநகராட்சிக்கு யார் கழிவுகளை கொட்டுகிறார்கள் என்பது தெரியும். ஆனால், நடவடிக்கை எடுக்க முடியாது. யாராவது பொதுமக்கள் மாட்டினால் அவர்களுக்கு மட்டும்தான் அபராதம் போடும்.
இதில் மாசு கட்டுப்பாட்டு வாரியமாவது சென்னையில் ஏன் இப்படி கழிவுகள் கொட்டப்படுகின்றன, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று சென்னை மாநகராட்சியை கேள்வி கேட்கலாம். ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறது. மழை வெள்ளம் தேங்கினால் மட்டும் விழிப்புணர்வு வருகிறது. பிறகு அதுவும் காணாமல் போய் விடுகிறது.
கூவம் ஆற்றில் கட்டடக் கழிவுகள் கொட்டியபோது மாநகராட்சி எந்த கேள்வியையும் கேட்கவில்லை. கூவம் ஆறு நீர்வளத்துறையின் கீழ் வந்தாலும், மாநகராட்சி எல்லையில் இருப்பதற்காகவது கேள்வி கேட்டிருக்கலாம். இப்படி சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அந்தளவுக்கு அலட்சியமாக இருந்து வருகிறது. இந்த அபராதமெல்லாம் எந்த விதத்திலும் உதவாது. உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கழிவுகள் விஷயத்தில் விடிவு பிறக்கும்” என்று தெரிவித்தார்.