இலங்கையில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வீதிக்கு வந்து மிகப்பெரிய போராட்டங்களை 2022-ம் ஆண்டு நடத்தினர். அதன் பிறகு, அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. வரும் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் களமிறங்கியிருக்கின்றன.
இந்த நிலையில், இலங்கை பொதுஜன பெருமுனா கட்சியின் (எஸ்.எல்.பி.பி) வேட்பாளராக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சே போட்டியிடுகிறார் என்ற தகவல் இலங்கை அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில், ஆளும் எஸ்.எல்.பி.பி-யின் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
தங்கள் கட்சியின் வேட்பாளரைத் தேர்வுசெய்வது குறித்து கடந்த சில நாள்களாக எஸ்.எல்.பி.பி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்திவந்தனர். அதில், அந்தக் கட்சியின் வேட்பாளராக தம்மிக்க பெரேரா பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், கடைசி நேரத்தில், ‘தனிப்பட்ட காரணங்களுக்காக’ தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துவிட்டார். அதைத் தொடர்ந்து, நமல் ராஜபக்சே வேட்பாளராகத் தேர்வுசெய்யப்பட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகனான நமல் ராஜபக்சேவுக்கு 38 வயது ஆகிறது. தற்போது, எஸ்.எல்.பி.பி கட்சியின் தேசிய அமைப்பாளராக இருக்கும் இவர், அதிபர் தேர்தலில் போட்டியிடும் இளம் வயது வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நமல் ராஜபக்சேவைப் பொருத்தளவில், அதிபர் தேர்தலில் வெற்றிபெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இலங்கை அரசியலில் ராஜபக்சே குடும்பம் ஆதிக்கம் செலுத்துவதாக விமர்சனம் இருக்கிறது.
2022-ம் ஆண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் கிளர்ந்தெழுந்ததைத் தொடர்ந்து, அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சேவும் ராஜினாமா செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு பயந்து, ராஜபக்சே குடும்பத்தினர் ஓடிஒளிந்தார்கள். இப்போதும் இலங்கையில் குழப்பமான நிலைதான் நீடிக்கிறது. இப்படியான சூழலில், ராஜபக்சே குடும்பத்தினர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று எஸ்.எல்.பி.பி கட்சியில் பெரும்பான்மையோர் கருதுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
‘இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளரும் எளிதாக வெற்றிபெற்றுவிட முடியாது என்பதுதான் கள யதாத்தமாக இருக்கிறது. போட்டியிடும் வேட்பாளர்களில் எல்லோருக்குமே பல சவால்கள் இருக்கின்றன. ஒருவர்கூட 50 சதவிகித வாக்குகளைப் பெற முடியாது’ என்கிறார்கள் இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிலர்.
‘அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடப்போகிறேன்’ என்று ரணில் விக்ரமசிங்கே அறிவித்தவுடன், எஸ்.எல்.பி.பி கட்சியின் நாடாளுமன்ற குழுவில் பலர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால், எஸ்.எல்.பி.பி கட்சியின் இளம் எம்.பி-க்கள் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், இப்போது நமல் ராஜபக்சே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதால், அந்த இளம் எம்.பி-க்கள் நமல் ராஜபக்சேவை ஆதரிப்பார்கள் என்றும் நமல் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
2010-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக ஹம்பந்தோட்டாவில் நமல் ராஜபக்சே போட்டியிட்டு வெற்றிபெற்றார். மகிந்த ராஜபக்சே 2005-ம் ஆண்டு அதிபர் ஆவதற்கு முன்புவரை, 16 ஆண்டுகளாக ஹம்பந்தோட்டா எம்.பி-யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசியல் வரலாற்றில் தீவிரமான சிங்கள புத்த மதத் தலைவர் என்று அறியப்பட்டவர் மகிந்த ராஜபக்சே. அவருடைய மகன் நமல் ராஜபக்சேவும் தந்தையின் அரசியல் பாதையில் பயணிப்பவராக இருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக தனக்கான ஆதரவாளர்களை உருவாக்குவதில் அவர் கவனம் செலுத்திவந்தார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தனது எதிர்கால அரசியல் வளர்ச்சிக்கு பலம் சேர்க்கும் என்று அவர் கருதுகிறார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு, சொந்தக் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்கள் காத்திருக்கின்றன.