டிராவல்ஸ் நிறுவனம் மூலம் ரூ.20 கோடி மோசடி; 2 ஆண்டுகள் தலைமறைவு… தஞ்சை நபர் சிக்கியது எப்படி?

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை, நந்தனம் பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம் வயது 42. இவர் அய்யம்பேட்டையில் ஃபரீனா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அப்பகுதியில் பலராலும் அறியப்பட்ட பிரபல நிறுவனமாக இவருடைய டிராவல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தன்னுடைய டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், லாபத்தில் பங்கு தொகை தருவேன், ரூ.1 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் 2,500 வழங்கப்படும் என விளம்பரம் செய்துள்ளார்.

டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி மோசடி செய்த ஹக்கீம்

கவர்ச்சியான அந்த விளம்பரத்தை பார்த்த பலரும் டிராவல்ஸில் முதலீடு செய்துள்ளனர். தொடக்கத்தில் சொன்னதுபோல் முதலீடு செய்தவர்களுக்கு சரியாக லாப பங்கு தொகையை திருப்பி தந்துள்ளார். இதனால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஹக்கீம் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ரூ.1 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை தஞ்சாவூர் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் முதலீடு செய்துள்ளனர். இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டில், முதலீடு செய்தவர்களுக்கு பங்கு தொகையை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து அவர்கள் ஹக்கீமிடம் கேட்டதற்கு தருகிறேன் என காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

நாட்கள் ஆன பிறகும் பணம் தராத அவர் ஒரு கட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு முறையான பதிலும் சொல்லவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு, ஹக்கீம் செய்த மோசடி தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொள்ளாமல் புகாரை கிடப்பில் போட்டதாககூறப்படுகிறது. இந்த சூழலில் ஹக்கீம் தனது மனைவி பாத்திமாவுடன் தலைமறைவாகி விட்டார். அவர் எங்கே சென்றார் என தெரியவில்லை. இதையடுத்து ஹக்கீமை கைது செய்து நாங்கள் செலுத்திய முதலீட்டு பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். அத்துடன் எஸ்.பி, கலெக்டர் உள்ளிட்டோருக்கும் மனு அளித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த மாதம் மாவட்ட குற்றப்பிரிவிலிருந்து, பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையிலான போலீஸார் தலைமறைவாக இருந்த ஹக்கீமை தேடி வந்தனர். இதற்காக அய்யம்பேட்டை பகுதியில் ஹக்கீம் குடும்பத்தினர், நண்பர்கள், டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதில், ஹக்கீம் கோயம்புத்தூர், தொப்பம்பட்டி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசிப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர் ஹக்கீம் வசித்த பகுதியை போலீஸார் மறைமுகமாக கண்காணித்து வந்தனர்.

இதில் ஹக்கீம் இருப்பதை உறுதி செய்தவர்கள் அவர் வெளியே வந்த போது கைது செய்தனர். இதையறிந்து தலைமறைவான அவரது மனைவி பாத்திமாவை போலீஸார் தேடி வருகின்றனர். ஹக்கீமை, தஞ்சாவூருக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சுமார் 400-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.20 கோடி மோசடி செய்திருப்பதாக ஹக்கீம் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில், ஹக்கீமை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் விசாரணை செய்வதற்காக கஸ்டடி எடுக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.