Tamil News Live Today: தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்-ருக்கு எதிரான வழக்குகள் – உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்-ருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகள் – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பு! 

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில், மேல் விசாரணை நடத்தி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தாக்கல்செய்த அறிக்கைகளின் அடிப்படையில், இருவரையும் வழக்குகளிலிருந்து விடுவித்துச் சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன.

சொத்துக்குவிப்பு வழக்குகளிலிருந்து அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, உத்தரவுகளை மறு ஆய்வு செய்திடும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

தங்கம் தென்னரசு – ஆனந்த் வெங்கடேஷ் – கே.கே.எஸ்.எஸ்.ஆர்

கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் விசாரணை தொடங்கியது. அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலும் விசாரணைக் காலத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததையடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்த நிலையில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எதிரான வழக்குகளில்… நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று காலை 10:30 மணிக்குத் தீர்ப்பளிக்கவிருக்கிறார்.