உணவகத்தில் அதிகம் வேலை வாங்கிய அக்கா; ஆத்திரத்தில் தம்பி வெறிச்செயல் – தஞ்சாவூர் அதிர்ச்சி!

தஞ்சாவூர் அருகே உள்ள மானோஜிப்பட்டி சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மனைவி உமா வயது 52. இவர் வீட்டிலேயே உணவகம் நடத்தி வந்துள்ளார். தனக்கு உதவியாக வேலை செய்வதற்கு உமா, தன் தம்பி சிவக்குமாரை வேலைக்கு வைத்துள்ளார். உணவகத்தில் உமா, சிவக்குமாரிடம் அதிக வேலை வாங்கி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.

கொலை – Murder (Representational Image)

இந்நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி உமா உணவகத்தில் சிவக்குமாரை அதிகம் வேலை வாங்கியதாக சொல்லப்படுகிறது. தன்னை தம்பி என்றும் பாராமல் எவ்வளவு வேலை வாங்குவாய் என ஆத்திரத்தில் அக்காவிடம் சண்டை போட்டுள்ளார் சிவக்குமார். அப்போது உணவகத்திலும், வீட்டிலும் யாரும் இல்லை. இந்த சுழலில் ஆத்திரம் அடங்காத சிவக்குமார், தன் அக்காவை கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். வலி தாங்காமல் அலறியபடி ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார் உமா.

சத்தம் கேட்டு ஓடி வந்த அருகில் இருந்தவர்கள் உயிருக்கு போராடிய நிலையிலிருந்த உமாவை மீட்டு, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த உமா, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதுடன், அக்காவை கொலைசெய்த சிவக்குமாரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே, சிவக்குமார் இரட்டை கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.