கண்ணகி சென்ற பாதையில்… பசுமை நடையுடன் ஓர் இலக்கியப் பயணம்!

“விராட்டிப்பத்திலுள்ள ஸ்ரீ சமயாள்குடில் மாரியம்மன் கோயிலில் கண்ணகியின் பாதத்தை சிலையாக வைத்து வழிபாட்டு வருகின்றனர்…” என்பதுபோன்ற புதிய தகவல்களை பசுமை நடைப் பயணத்தில் அறிந்துகொள்ள முடிந்தது.”

கண்ணகி சென்ற பாதையில்

பரபரப்பான இந்தக் காலகட்டத்தில் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்து மகிழவும், அது குறித்துக் கலந்துரையாடவும், அதன் மூலம் மனதையும் உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது மதுரை பசுமை நடை அமைப்பு.

பத்து ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளையர்களால் இயற்கை வளங்கள், மலைகள் மிகவும் பாதிக்கப்பட்டன. ஒருகட்டத்தில சமணர்களின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் ஆனைமலை, அரிட்டாப்பட்டி மலைகளையும் கபளிகரம் செய்ய பார்த்தனர். அதற்கு எதிராகப் பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் போராடத் தொடங்கியபோது மதுரையிலுள்ள எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சூழலியளாளர்களும் இணைந்து போராடி மலைகளைக் காத்தனர். அதன் நீட்சியாக உருவானதுதான் ‘பசுமை நடை’.

பசுமை நடை

எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் தலைமையில் 2010 -ம் ஆண்டு தொடங்கிய பசுமை நடை, மதுரைக்குள்ளும் அதனைச் சுற்றியும் வரலாறு பொதிந்துள்ள ஊர்களுக்கும், மலைகளுக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்வரை அழைத்துச் சென்று அவற்றுடன் நம்மை இணைக்கும் பாலமாகச் செயல்பட்டு வருகிறது. மறைந்த தொ.ப உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய இந்தப் பசுமை நடையின் விளைவுகளை அறிந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும் ஆர்வலர்கள் குடும்பத்துடன் வந்து கலந்துகொள்கின்றனர்.

அந்த வரிசையில் கடந்த 3-ம் தேதி சிலப்பதிகார நாயகி கண்ணகி நடைபோட்ட அச்சம்பத்து, விராட்டிபத்து ஊர்களை நோக்கிய பசுமை நடைப் பயணத்தில் நாமும் கலந்துகொண்டோம்.

பசுமை நடையில் கலந்துகொண்டோர்

“கோவலனை இழந்த கண்ணகி மதுரையை எரித்து விட்டு மேற்குத் திசை நோக்கி நடந்தாள். பாண்டிய மன்னன் ஆட்சி காலத்தில் பிராட்டியார் பத்து என்னும் ஊர் மதுரையின் மேற்கு எல்லையாக இருந்தது. அந்தப் பிராட்டியார் பத்துதான் தற்போது விராட்டிப்பத்து என்றழைக்கப்படுகிறது” என்றனர்.

விராட்டிபத்து, அச்சம்பத்து ஆகிய ஊர்கள் மதுரை-தேனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஆவேசமாகச் சென்ற கண்ணகி இவ்விடங்களில் நின்று மதுரையைத் திரும்பி பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

“பசுமை நடையுடன் ஏற்பட்ட தொடர்பால்தான் மதுரையின் கதையை அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது. விராட்டிப்பத்திலுள்ள ஸ்ரீ சமயாள்குடில் மாரியம்மன் கோயிலில் கண்ணகியின் பாதத்தை சிலையாக வைத்து வழிபாட்டு வருகின்றனர்” என்றார் எழுத்தாளர் சித்திரைவீதிக்காரன்.

“அச்சம்பத்தில் சாலையோரம் இருந்த ஒரு கல்லை, திரும்பி நின்று கும்பிடும் கோயில் என்கின்றனர். அவ்வூரில் மரணமடைந்தவர்களின் இறுதிச்சடங்கின்போது இங்கு வந்து வழிபாடு செய்த பின்னர்தான் உடல்களை அடக்கம் செய்கின்றனர்.” என்ற தகவலையும் கூறினார்.

உரை நிகழ்தப்படுகிறது

“மதுரையிலுள்ள அனைவருக்கும் கண்ணகி கதை தெரியும். இளங்கோவடிகளுக்கு முன்பிருந்தே செவிவழி, வாய்மொழிக் கதையாக இந்த இலக்கியம் இருந்துள்ளது. கண்ணகியை நம் ஊர்களில் காளி, மாரி என்ற பெயர்களிலும், கேரளாவில் பகவதி என்றும், சிங்களர்களும், இலங்கைத் தமிழர்களும் பத்தினி தெய்வம் என்றும் கண்ணகி என்றும் தெய்வமாக வணங்குகின்றனர்” எனக் கண்ணகி வழிபாட்டினை விவரித்தார் பேராசிரியர் சுந்தர் காளி.

நடைப்பயணத்தின்போது பல கதைகளையும், புதிய தகவல்களையும் எளிமையாக எடுத்துரைத்தார் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன், ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார்.

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல் சுரந்து கொண்டே இருக்கும் மதுரையின் கதையும், அதனால் உருவான இலக்கியமும், மதுரைக்குள்ளும் சுற்றுப்பகுதியிலும் காலடி வைக்கும் இடமெல்லாம் கீழடியாக தமிழர்களின் தொன்மையும் பெருமையும் புதைந்து கிடக்கும் வரலாற்றைத் தெரிந்துகொள்ள பசுமை நடையுடன் தொடர்ந்து நடக்கலாம்.