August 6 Hiroshima day: மறக்குமா மனித இனம்… ஹிரோஷிமாவில் உலகின் முதல் அணுகுண்டு விழுந்த நாள்!

உலக வரலாற்றில் யாரும் மறக்க மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத உலகின் முதல் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நாள் இன்று. 1939-ல் தொடங்கிய இரண்டாம் உலகப் போர், 1945-ல் முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த நேரம் அது. ஆனால் , இடைப்பட்ட இந்த ஆறாண்டு காலமும், அச்சு நாடுகள் அணியில் இடம்பெற்றிருந்த ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளும், நேச நாடுகள் அணியில் இடம்பெற்றிருந்த பிரிட்டன், பிரான்ஸ், போலந்து ஆகிய நாடுகளுக்கும் கடுமையான போர் நடைபெற்றது.

இரண்டாம் உலகப் போர்

இதில், சோவியத் யூனியனும் ஜெர்மனிக்கு எதிராக நேச நாடுகளுடன் இணைந்து போரிட்டது. இந்தக் கடும் போரில் லட்சக்கணக்கான உயிர்கள் மடிந்துகொண்டிருந்த வேளையில் 1945 மே மாதம், ஹிட்லரின் ஜெர்மனி நாஜி படை பிரிட்டனிடம் சரணடைந்ததையடுத்து பெரும்பாலான பகுதிகளில் போர் முடிந்திருந்தது. ஆனால், ஆசியாவில் போர் நீண்டுகொண்டிருந்தது. காரணம், அச்சு நாடுகள் அணியிலிருந்த ஜப்பான். அதனால், ஜப்பான் மீது அணுகுண்டு வீசி போரை முடிவுக்கு கொண்டுவர முடிவெடுத்தது அமெரிக்கா.

இது தொடர்பாக, ஜப்பானிய குடிமக்களிடம் வான்வழித் தாக்குதல்கள் பற்றி எச்சரிக்கப்பட்டதாகவும், ஜப்பான் முழுவதும் 63 மில்லியனுக்கும் அதிகமான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 08:15 மணியளவில் ஜப்பான் மக்கள் எதிர்பாராத சமயத்தில், அமெரிக்கா எந்தவொரு எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்காமல், ஹிரோஷிமாவில் (Hiroshima) லிட்டில் பாய் (Little Boy) என்ற பெயரில் முதல் அணுகுண்டை போட்டது. குண்டு விழுந்த வினாடியில் 500 மீட்டர் சுற்றளவில் இருந்த மக்கள் அனைவரும் கனப் பொழுதில் புகையோடு காணாமல் போனார்கள்.

ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல்

சுமார் 15,000 டன் டிரைனிட்ரோடோலூயினுக்கு (TNT) சமமான ஆற்றல் வெளியான இந்தப் பேரழிவு தாக்குதலில் 70,000 முதல் 80,000 பேர் அந்தக் கணத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் , அணுகுண்டு தாக்குதலுக்கு முன்னர் ஹிரோஷிமாவில் 90,000 கட்டடங்கள் இருந்த நிலையில், அணுகுண்ட வீசப்பட்ட 1.6 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பரவிய தாக்கத்தால் அவற்றில் 28,000 கட்டடங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. உலகுக்கே இது பெரிய அதிர்ச்சியாக இருக்க, அடுத்த மூன்றாவது நாளே (1945 ஆகஸ்ட் 9) அதற்கு மேலும் இன்னொரு அதிர்ச்சியைத் தரும் வகையில் நாகசாகியில் (Nagasaki) ஃபேட் மேன் (Fat Man) என்ற பெயரில் இரண்டாவது அணுகுண்டை வீசியது.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் ஜப்பான் வேறுவழியில்லாமல், நேச நாடுகள் அணியிடம் சரணடையவே, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. ஆனால், அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்பு, கதிர்வீச்சு பாதிப்பு ஆகியவற்றால் அந்த ஆண்டின் இறுதியில் பலி எண்ணிக்கை மட்டும் 1,40,000-ஆக அதிகரித்தது. குறிப்பாக, அந்த அணுகுண்டு தாக்குதலின் கதிர்வீச்சு பாதிப்புக்குள்ளானவர்களின் சந்ததியினர் தலைமுறை தலைமுறையாக உயிரியல் குறைபாட்டுடன் பிறந்தனர்.

அமெரிக்கா – சீனா

இத்தகைய அழிவை ஏற்படுத்திய அமெரிக்காவே போரில் அணுகுண்டைப் பயன்படுத்திய முதலும் , கடைசியுமான நாடு. அமெரிக்காவால், மனித இன வரலாற்றில் நிகழ்ந்த மிக கொடூரமான இந்த சம்பவம், உலகளாவிய ஆயுதக் குறைப்பு மற்றும் அமைதி ஆகிய முயற்சிகளுக்கு வழிவகுத்தது. இதுவே, அணுசக்தி இல்லாத உலகம் என்ற எண்ணத்தை நோக்கி நகரவைத்தது.

காலப்போக்கில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது பற்றிய கவலை ஒரு பெரிய உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்தது. பின்னர், ஒவ்வொரு ஆண்டும் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலுக்கான தினத்தில் அதில் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிப்பதுடன், அமைதியை முன்னெடுப்பதற்காக பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஜப்பான்

இயற்கை பேரிடராக இருந்தாலும், மனிதனின் செயற்கை பேரிடராக இருந்தாலும் `மீண்டெழுதல்’ என்று சொல்லுக்குப் பெயர்போன ஜப்பானில், இன்று அதே ஹிரோஷிமா மற்றும் நாகசாகி இரண்டும் வளர்ந்த நகரங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. மேலும், அணுகுண்டு தாக்குதலில் இறந்த ஆத்மாக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.