“மதுவுக்கு எதிரான படம்; மதுரை நந்தினி இன்ஸ்பிரேஷன்” – ‘சாலா’ பட இயக்குநர் எஸ்.டி. மணிபால்

2022-ல் ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடித்த படம் ‘விட்னஸ்’. துப்புரவுப் பணியாளர்களின் துயரங்கள், மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலத்தை ஒழிப்பதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள், சட்டத்தின் குறைபாடுகள், அரசு இயந்திரத்தின் அலட்சிய மனப்பான்மை என்று பல விஷயங்களைப் பேசிய படம் ‘விட்னஸ்’. அந்த படத்தைத் தயாரித்த டி.ஜி.விஷ்வ பிரசாத், அடுத்தும் சமூக அக்கறையோடு ஒரு கதையைத் தயாரிக்கிறார். புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் பெயர் ‘சாலா’. சமீபத்தில் அதன் டீசரை அல்லு அர்ஜூன் வெளியிட்டிருக்கிறார். பிரபுசாலமனின் உதவியாளரான எஸ்.டி. மணிபால், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

”ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருக்கிறது மாதிரி சினிமாவுக்கும் இரண்டு பக்கம் இருக்கிறது. ஆடியன்ஸ் பார்வையில் சினிமாங்கறது பொழுதுபோக்கானது. ஆனால், சினிமாவுக்குள் இருக்கும் எங்களுக்கு சினிமாதான் வாழ்க்கை. இதுதான் எங்களுக்குச் சுவாசம். அதனால் செய்கிற வேலையோடு சேர்ந்து சமூகத்துக்கு எதாவது பண்ணனும்னு விரும்புகிறேன். அப்படிச் சிந்திக்கும் போதுதான் இந்த கதை உருவானது. தமிழ்நாட்டில் இன்றைக்கு பெரும் பங்கு வகிப்பது மதுதான். 20 வருஷங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பெர்டிலிட்டி சென்டர் என்பதே கிடையவே கிடையாது. ஆனால், இன்றைக்கு முக்குக்கு முக்கு அது இருக்கிறது. மதுவினால் ஆண்மைத்தன்மை குறைய ஆரம்பித்ததால்தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கு.

இயக்குநர் மணிபால்

வன்முறையை உருவாக்குகின்ற இடமாக மதுக்கடைகள் இருக்கிறது. பெரும்பாலான கொலைகளுக்கான திட்டம் தீட்டுகிற இடமாக மது பார்கள்தான் இருக்கு. காஃபி ஷாப்ல ஸ்கெட்ச் போட்டு, யாரையாவது கொலை செய்யணும்னு நினைச்சிருப்பாங்களா?” – எனக் கேட்கிற இயக்குநர் மணிபால், இயக்குநர் பிரபுசாலமனிடம் ‘தொடரி’, ‘கும்கி 2’, ‘காடன்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். தொடர்கிறார் மணிபால்…

“இந்த படத்தின் கதையைக் கிட்டத்தட்ட ஐம்பது கம்பெனிகளுக்காவது சொல்லியிருப்பேன். படத்தின் கதை மதுவுக்கு எதிரான கதை என்பதால் பலரும் தயாரிக்க முன்வரலை.

தீரன்

அந்த சமயத்தில் தான் என் நண்பரும், நடிகருமான ஶ்ரீநாத், என்னை பீப்பிள் மீடியா நட்ராஜ் சார்கிட்ட அறிமுகம் செய்து வைத்தார். அவர் மூலமா ‘விட்னஸ்’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் தயாரிப்பாளரான டி.ஜி.விஸ்வ பிரசாத்திடம் பேசினேன். இந்த கதையில் இருக்கும் சமூக அக்கறையினால், உடனே படப்பிடிப்புக்கு கிளம்பலாமென்று சொல்லிவிட்டார். ‘சாலா’னா ஒரு பெயர்ச்சொல் தான். சாலமன் என்பதுடைய சுருக்கம்..

டாஸ்மார்க் என்பது அரசாங்கமே நடத்துவதுதான். ஆனால், அந்த டாஸ்மார்க் பக்கத்தில் ‘பார்’ டெண்டர்கள் முறையில் தனியார் நடத்துவது. ஆளுங்கட்சியுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் இந்த பார்களை டெண்டர்கள் எடுத்து நடத்துவார்கள். இதற்குப் பின்னாடி அரசியலையும் இந்த கதையில் பேசியிருக்கிறேன். கதைப்படி ராயப்புரம்ல உள்ள ஒரு பிரபலமான ஒரு பாரை கைப்பற்ற இரண்டு ரௌடி குருப்புகள் மோதுகிறார்கள். அந்த பாரை இழுத்து மூட நினைக்கிற ஒரு பெண் இவங்கள சுத்தி நடக்கற சம்பங்களோடு கதை நகரும். இந்தக் கதையை ஹீரோக்கள் நிறைய பேர்கள்கிட்ட சொல்லியிருப்பேன். நடிக்க யாரும் முன்வரலை. அதனால் புதுமுகமா போயிடலாம்னு தீரனைப் பிடித்தோம். அந்த பாரை மூட நினைக்கும் பெண் புனிதாவாக ரேஷ்மா நடிக்கிறாங்க.

சாலா படத்தில்..

ஹீரோனு சொல்றதை விட, கதையின் நாயகனா தீரன் நடிக்கிறார். இவர் அல்லு அர்ஜூன் சாரின் நண்பராவார். ரௌடி கேங்க்ல நல்லவராக வருகிறார். இந்த கேரக்டருக்காக ஜிம்ல அவர் உடம்பை ஏத்தி, ஃபிட்டா ரெடியானார். மதுக்கடையை மூட நினைக்கிற புனிதா கதாபாத்திரத்திற்கு மதுரை நந்தினிதான் இன்ஸ்பிரேஷன். ஏன்னா மதுக்கடைகளை மூட வேண்டுமென்று பல வருடங்களாகப் பரப்புரை செய்து போராட்டம் நடத்தி வரும் பெண் அவங்கதான். நிஜவாழ்க்கையில் வீரம் நிறைந்த பெண் அவர். இந்த படத்தில் ஶ்ரீநாத், அருள்தாஸ், சம்பத்ராம், ‘மெட்ராஸ்’ வினோத் என நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். படத்தின் க்ளைமாக்ஸும் வித்தியாசமான க்ளைமாக்ஸ் ஆக இருக்கும். சென்ஸாரும் ஆகிடுச்சு. யு/ஏ கொடுத்திருக்காங்க. இந்த மாதம் 23ம் தேதி திரைக்கு வருகிறோம்.” என்கிறார் மணிபால்.