என்விடியா மற்றும் ஏஎம்டி போன்ற போட்டியாளர்களை சமாளிப்பதற்காகவும், வணிகத்தை மீட்டெடுப்பதற்காக செலவுகளை கட்டுப்படுத்துவதற்காகவும் இன்டெல் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக கடந்த சில தினங்களாகவே சமூகவலைதளங்களில் செய்திகள் வைரலாகின.
இந் நிலையில், வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுமார் 15,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் கெல் சிங்கர், “இதனை பகிர்ந்து கொள்வதற்கு எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இதனை வாசிக்கும்போது உங்களுக்கும் கடினமானதாக இருக்கும் என்று எனக்கு தெரியும். இன்டெல் நிறுவனம் 2025-ஆம் ஆண்டில் சுமார் பத்து பில்லியன் அமெரிக்க டாலரை சேகரிக்க திட்டமிட்டுள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால் செலவை குறைக்க வேண்டும்.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் செலவுகள் பெரிய அளவில் குறையவில்லை. எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் அதிகரிக்கவில்லை. இந்த முடிவு எனக்கு மிகவும் சவாலாகத்தான் இருக்கிறது. எனது வாழ்நாள் பணியில் நான் செய்த மிக கடினமான விஷயம் என்றால் இதுதான். இந்த ஆண்டு இறுதிக்குள் மிகுதியான பணி நீக்கங்கள் நிறைவடையும்.
இதேபோல் கலிபோர்னியாவை அடிப்படையாகக் கொண்ட சாண்டா கிளாரா நிறுவனமானது, செலவைக் குறைக்கும் நோக்கத்தில் பங்குதாரர்களுக்கான டிவிடெண்ட் தொகையை நிறுத்தி வைத்துள்ளது. சென்ற வருடம் இரண்டாம் காலாண்டில் சிறிய வருவாய் சரிவுடன் இன்டெல் நிறுவனமானது தனது இழப்புகளை அறிவித்தது. மூன்றாவது காலாண்டில் சந்தையின் எதிர்பார்ப்பை விட வருவாயானது மிக குறைவாக இருந்ததாக அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு பின்னர் இன்டெல் நிறுவனத்தின் பங்குகள் 19% ஆக சரிந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள காலக்கட்டத்தில் 1.6 பில்லியன் டாலர் இழப்பினை பதிவு செய்துள்ளது. வருவாயானது 12.9 பில்லியன் டாலரிலிருந்து 12.8 பில்லியன் டாலராக குறைந்துள்ளது” என த் தெரிவித்துள்ளார்.
“இன்டெல் நிறுவனத்தின் அறிவிப்புகள் செலவுகளை குறைப்பதற்கான ஒரு வழியாக இருந்தாலும் கூட குறுகிய காலத்திற்கு தான் வருவாயை உயர்த்துவதற்கு உதவுமே தவிர, இந்த பணிநீக்க நடவடிக்கைகள் சிப் சந்தையின் வளர்ச்சியை நிலை நிறுத்துவதற்கு போதுமானதாக இருக்காது. உள்நாட்டு உற்பத்தியில் ஏ.ஐ சிப்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், சிப் உற்பத்தியில் இன்டெல் நிறுவனமானது தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு ஒரு முக்கியமான காலகட்டத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் உள்ளது” என இ-சந்தையின் ஆய்வாளரான ஜேக்கப் பார்ன் கூறியுள்ளார்.