மகாராஷ்டிராவில் வரும் அக்டோபர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி ஓர் அணியாகவும் போட்டியிடுகின்றன. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்த பிறகு சந்திக்கும் இரண்டாவது தேர்தல் இதுவாகும். இத்தேர்தலில்தான் பிரிந்த இரு அணிகளில் யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பது தெரியவரும். இத்தேர்தலில் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து இருக்கிறது. இதற்காக ராஜ் தாக்கரே ஏற்கெனவே மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். பா.ஜ.க-வும் தனியாக யாத்திரை மேற்கொள்கிறது. தற்போது துணை முதல்வர் அஜித் பவாரும் மாநிலம் முழுவதும் 24 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
வடக்கு, மேற்கு மகாராஷ்டிரா, மும்பை, விதர்பா பகுதியில் உள்ள 39 சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சென்று கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்துப் பேச இருக்கிறார். ஜன்சமான் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரையில் மக்களுக்காக அரசு தீட்டிய நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் தெரிவிக்க இருக்கிறார். அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் சுனில் தட்கரே இது குறித்து கூறுகையில், “யாத்திரையில் ஒவ்வொரு தொகுதியிலும் அஜித் பவார் இரண்டு பொதுக்கூட்டங்களில் பேசுவார். அதோடு பெண்கள், இளைஞர்கள், பழங்குடியினர், ஒடுக்கப்பட்ட மக்களை சந்தித்து பேச இருக்கிறார். இந்த யாத்திரை நாசிக் அருகில் உள்ள தீண்டோரி என்ற இடத்தில் 8-ம் தேதி தொடங்கி இம்மாதம் 31-ம் தேதி முடிவடைகிறது” என்றார்.
இதற்கிடையே மக்களவைத் தேர்தலில் பாராமதி மக்களவை தொகுதியில் அஜித் பவார் மனைவி தோல்வி அடைந்திருப்பதால், பாராமதி கிளை தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்யும்படி அஜித் பவார் கேட்டுக்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மும்பையில் 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மும்பை ஆம் ஆத்மி கட்சி தலைவர் பிரீத்தி சர்மா மேனன் அளித்த பேட்டியில், ”மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எங்களது கட்சி தனித்துப் போட்டியிடும். எங்களது கட்சி நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாகும். மும்பையில் எங்களுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. எனவே தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம்” என்றார். ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இருக்கும் நிலையில் அக்கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக தெரிவித்து இருப்பது, இந்தியா கூட்டணி தலைவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.