அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம்; பழுதான இருக்கைகள்; பராமரிக்க எழும் கோரிக்கை!

சென்னை, கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம் அமைந்துள்ளது. இந்த அரங்கம் சுமார் 1,200 பேர் அமரக்கூடிய அதி நவீன வசதி கொண்டது. சமீப காலங்களில் இந்த அரங்கம் பொதுப் பயன்பாட்டிற்கு (வாடகை) விடப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள், பொது அமைப்புகள், கலந்தாய்வுக் கூட்டங்கள் எனப் பல விதமான நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுகின்றன. இந்த அரங்கத்தினுள் உள்ள நூற்றுக்கணக்கான இருக்கைகள் மிக மோசமாகப் பழுதடைந்துள்ளது. பாதி உடைந்த நிலையிலும், சில இருக்கைகள் முழுமையாக அகற்றப்பட்டும் உள்ளது. பெரும்பாலானவற்றில் இருக்கைகள் இல்லாமல் சாய்ந்து கொள்ளும் பின் பகுதிகள் மட்டுமே உள்ளது. சில வரிசைகளை நீள நீளமாக டேப்பை போட்டுப் பயன்படுத்த முடியாத அளவில் கட்டி வைத்துள்ளார்கள். மேலும், சாய்ந்துகொள்ளும் பின் பகுதி மட்டும் இருக்கும் இருக்கைகளில் பிளாஸ்டிக் சேர்களைப் போட்டு பங்கேற்பாளர்கள் அமரவைக்கப்படுகின்றனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்களையும், பங்கேற்பாளர்களையும் சமாளிப்பதற்கு ஏதுவாக அரங்கை புக் செய்பவர்களிடம், இத்தகைய நிலையிலா வாடகைக்கு விடுவது என்ற கேள்வி எழுகிறது.

பொதுப் பயன்பாட்டுக்கு விடப்படும் இந்த அரங்கம், போதிய வசதிகளுடன் இருக்க வேண்டியது அவசியமானதாக இருக்கிறது. ஆனால், ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கு மிக முக்கியமாகக் கருதப்படும் இருக்கை வசதிகளே இல்லாமல் இருப்பது, வாடகைக்கு விடும் அளவுக்கு அந்த அரங்கம் இல்லை என்பதையே உணர்த்துகிறது. எனவே, அரங்கத்தில் இருக்கை வசதிகளைச் சரி செய்து, மேம்படுத்திட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது!