தென்காசி: மாசடைந்த `ஊருணி’… குப்பை மேடாகக் காட்சியளிக்கும் அவலம் – ஆதங்கத்தில் கிராம மக்கள்!

சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தி ‘தூய்மை பாரதம்’ இயக்கத்தினை மத்திய, மாநில அரசுகள் அனைத்து இடங்களிலும் முன்னெடுத்து வருகின்றன. இது தவிர கிராம நலன் மற்றும் முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு ஜல்ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி வாய்ப்பு திட்டம், முத்ரா கடன், நகை கடன், விவசாய கடன் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் கிராமத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு சுழல்கிறது என்று சொல்லலாம். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளைகவுண்டம்பட்டி கிராமத்தின் நிலை கவலையளிக்கக்கூடியதாக மாறியிருக்கிறது.

ஊருக்குள் பொது மக்களின் பயன்பாட்டில் இருந்த ஊருணி முழுவதும், பாசிப்படர்ந்து கழிவு நீர் குட்டையாக மாறியுள்ளது. இதுதவிர ஊருணியின் ஒருபுறமாக கொட்டப்பட்டிருக்கும் குப்பை, சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் அளவிற்கு குப்பைமேடாக காட்சியளிக்கிறது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பஞ்சாயத்து சார்பில் அமைத்திருக்கும் நீர்த்தேக்க தொட்டிகள்கூட பயன்பாட்டில் இல்லாமல் காற்றைக் கக்கும் வெற்றுக் குழாய்களாக மாறியிருக்கின்றன. இப்படி, ஊர் முழுவதுமே சுகாதாரமற்ற சூழலில் சிக்கியிருக்க, அங்கு வாழும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விசாரித்தோம்.

குப்பை

அப்போது நம்மிடம் பேசிய கிராமத்தினர், “வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எங்கள் ஊர் ராமசாமியாபுரம் பஞ்சாயத்திற்குள் வருகிறது. 700-க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் எங்களது கிராமத்தில் கூலித் தொழிலாளர்கள் அதிகம். பருத்திக்காட்டிற்கு வேலைக்கு செல்வோரும், விவசாயம் செய்வோரும் நிறைந்திருக்கும் எங்கள் ஊரில் காலையில் வேலைக்கு செல்லும் ஆண்களும், பெண்களும் மாலையில் தான் வீடு திரும்புவர். தென்காசி மாவட்டத்தில், குறைவான மக்கள் தொகையை கொண்ட கிராமங்களின் வரிசையில் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும் எங்களது ஊரின் நிலை சொல்லிமாளாது. வெள்ளை கவுண்டம்பட்டி ஊரில் மக்களின் தேவைகளையும், குறைகளையும் நிவர்த்தி செய்துதர பலமுறையும் பஞ்சாயத்து நிர்வாகத்திடம், அரசு அதிகாரிகளிடமும் முறையிட்டுவிட்டோம்.

ஆனால் ‘ஏழை சொல் அம்பலம் ஏறாது’ என்ற கதையாகத்தான் இன்று வரை எங்கள் நிலை உள்ளது. ஊருக்கு மத்தியில் பிரதான சாலையை ஒட்டி பொதுமக்கள் பயன்பாட்டில் ஊருணி இருந்து வந்தது. கடந்த ஆண்டுகூட ஊருணியை தூர்வாரி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அதன் நிலையை பார்க்கவே சகிக்கவில்லை. ஊருணியில் சாக்கடை நீர் கலப்பதால், பயன்படுத்துவதற்கு லாயக்கற்ற நிலைக்கு சென்றுவிட்டது. அதேபோல சாலையை ஒட்டி கண்மாயின் ஒரு புறமாக கொட்டப்படும் குப்பைக்கழிவுகள் ஊருணியின் தன்மையை கொஞ்சம், கொஞ்சமாக சீர்குலைத்து வருகிறது. இன்னமும் ஊருக்குள் சரியான சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, சுத்தமாவது இருக்கும் என்றால் அதுவும் இல்லை. ஊர் நலன் மீது அக்கறை செலுத்தவேண்டிய பஞ்சாயத்து நிர்வாகமும் ஊர்நிலையை எண்ணி கவலைப்படுவதாக தெரியவில்லை. மாசடைந்து பாழான நிலையில் கிடக்கும் ஊருணியை தூர்வாரி மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

நீர்த்தொட்டி

ஊருணியில் கழிவுநீர் கலப்பதையும் குப்பைகள் கொட்டப்படுவதையும் தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை பஞ்சாயத்து நிர்வாகம் எடுக்க வேண்டும். மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன் அபராதம் வசூல் செய்ய வேண்டும் என பலமுறை மனு அளித்துவிட்டோம். ஆனால் இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் இல்லை. மழை காலங்களில் சாலை முழுவதும் நீர் தேங்கி நிற்பதால், பள்ளம் மேடு தெரியாமல் வாகனங்கள் தடுமாற்றத்தைச் சந்திக்கின்றன. ஊருணியில் கழிவு நீர், குப்பை ஒன்றாக கலப்பதால் மிக எளிதாக கொசு உற்பத்தியாகி சுகாதாரக்கேடுக்கு வழி வகுக்கிறது. ஊருணியையொட்டி மக்களின் தேவைக்காக ஆழ்துளை கிணறு நீர் தேக்கத்தொட்டியை அமைத்து தந்திருந்தனர். தொடங்கி வைக்கப்பட்ட சில மாதங்கள் மட்டுமே நன்றாக செயல்பட்ட அந்தத் தொட்டி அதன் பிறகு மோட்டார் பழுது காரணமாக செயல்படவில்லை. இதை சரிசெய்து தரக் கோரி பலமுறை முறையிட்டும், வெறுமனே காட்சி பொம்மையாக மட்டுமே சின்டெக்ஸ் தொட்டி ஊருக்குள் அமைந்திருக்கிறது” என ஆதங்கம் கொட்டினர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டுகள் குறித்து பஞ்சாயத்து தலைவர் அந்தோணியம்மாள் பேசுகையில், “பஞ்சாயத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சுத்தம் பேணுப்படுவதை வலியுறுத்தி செயல்பட்டு வருகிறோம். அதன்படி தினந்தோறும் குப்பை சேகரிக்கும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாயத்து நிர்வாகத்தால் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் ராமசாமிபுரம் ஊரில் உள்ள உரக்குழியில் கொட்டி மக்க வைக்கப்படுகிறது. இந்நிலையில் வெள்ளைகவுண்டம்பட்டி ஊரின் சுகாதார நிலை குறித்த தெரிய வந்ததை தொடர்ந்து பொது இடங்களிலும் நீர் நிலைகளிலும் குப்பைகள் கொட்டக் கூடாது என எச்சரிக்கை கொடுத்திருக்கிறோம். ஆனால் அதையும் மீறி அங்கு குப்பைகள் கொட்டப்படுவது கவலையளிக்கிறது. சென்ற ஆண்டு அந்த ஊருணியை பஞ்சாயத்து நிர்வாகம் முயற்சியில் தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்காக புனரமைத்து கொடுத்தோம். ஆனால் தற்போது அந்த ஊருணி பாசிப்படைந்து, கழிவுநீர் கலக்கும் இடமாகவும், குப்பை மேடாகவும் மாறுவதை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஊர் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு இரண்டிற்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை நீர்த்தேக்க தொட்டிகளை அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பின்றி கிடக்கும் தொட்டியை சரிசெய்வதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாசடைந்த கிடக்கும் அந்த ஊருணியையும் தூர்வாரி சுத்தப்படுத்துவதற்கு பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். மக்களும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.