எதுவும் இல்லையென்றாலும் துணிவுடன் எதிர்த்து நில்!- இலட்சியத்தை நோக்கிய ஒரு சாமானியனின் வாழ்க்கை பயணம்!
ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலுவின் சுயசரிதை நூலான ‘GUTS’-யை வெளியிட்டார் டாடா குழும தலைவர் சந்திரசேகரன். ‘விதியை மாற்ற முடியாது’ என்பதை தான் உலகில் பெரும்பான்மையான மக்கள் நம்புவர். வெகு சிலர் மட்டும் இதை ஏற்க மறுத்து எதிர் நீச்சல் போட விரும்புவர்.
ஜெம் மருத்துவமனையின் தலைவர் Dr.C. பழனிவேலுவை பற்றி நாம் அனைவரும் அறிவோம். மருத்துவத்துறையில் அவர் எட்டிய உயரம், பெற்ற விருதுகள், செய்த சாதனை அனைத்துமே அவரை இத்துறையில் மிக பெரும் ஆளுமையாக உலகம் முழுதும் கருத வைத்துள்ளது. ஆனால், இந்த நெடுதூர பயணத்தில் அவர் சந்தித்த கணக்கில்லா சவால்கள் பற்றி அனைவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே ஒரு சிறு கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த பழனிவேலு, சிறு வயது முதலே துயரங்களை எதிர்கொண்டு வளர வேண்டிய சூழலுக்கு ஆளானார். அவரின் சொந்த கிராமத்தில் வறட்சியும் வறுமையும் தலைவிருத்தி ஆடியபோது, வாழ்வாதாரத்தை தேடி, பழனிவேலுவின் தந்தை கடன் வாங்கி மலேசியாவில் கூலி வேலை செய்ய முடிவெடுத்தார்.
1950களில் கடல் மார்க்கமாக பழனிவேலுவின் குடும்பம் மலேஷியா வந்தடைந்தனர். அங்கு பழனிவேலுவின் பெற்றோர் கூலி வேலை செய்தனர். பழனிவேலுவோ அங்குள்ள பள்ளியில் கல்வியை கற்க துவங்கினர். குழந்தை பருவத்தை தன் தாய்நாட்டில் அனுபவிக்க முடியாததும், அங்கே படிக்க முடியாததும் அவரை தினமுமே சோகத்தில் ஆழ்த்தியது. மீண்டும் இந்தியாவிற்கு செல்ல பெரும் தொகை தேவை என்பதால் அவர் தினக்கூலியாக பல இடங்களில் வேலை செய்து, காசு சேர்த்து, ஒரு வழியாக இந்தியா வந்தார். இந்தியாவில் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்க்கலாம் என கனவோடு காத்திருந்த பழனிவேலுவிற்கு எதிர்பாரா துயரங்கள் ஒவ்வொன்றாக வரத்துவங்கியது. சவால்களை கண்டு அஞ்சாமல், கையில் எதுவும் இல்லாமல், நெஞ்சில் துணிவை மட்டும் வைத்துகொண்டு, கல்வி ஒன்றையே செல்வமாக கருதி தனக்கென ஒரு பாதையை அமைத்துக்கொண்டு உயர்ந்தார். ஆனால் அவர் வாழக்கையில் உயர விரும்பிய காரணம் என்ன? எது அவரை அத்தனை தடைகளை கடந்து செல்ல ஊக்குவித்தது? இந்த இரண்டையும் தெரிந்துகொண்டாலே பல வாழ்க்கை பாடங்களை நாம் கற்றுக்கொள்ளமுடியும்.
“பழனிவேலு, நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒரு சுயசரிதையாக வெளிகொண்டு வரவேண்டும். உங்கள் வாழ்வின் கதை மிக சிறப்பான ஒன்றாக இருக்கிறது. கண்டிப்பாக நீங்கள் அதை எழுதுங்கள். அது நிச்சயம் இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாக அமையும்” என 2006ல் டாக்டர் பழனிவேலுவிடம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் டெல்லியில் அவரை சந்தித்தபோது கூறினார்.
அதை மனதில் கொண்டு, பல ஆண்டுகள் முயன்றுஇப்போது ‘GUTS’ எனும் தலைப்பில் தன் சுயசரிதையை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை 27.7.2024 அன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் டாடா குழுமத்தின் தலைவர், திரு. N.சந்திரசேகரன்; கவுரவ விருந்தினர்கள் தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் திரு. முத்துசாமி மற்றும் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி இனைந்து, ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு, முன்னாள் சிபிஐ இயக்குனர் D.R.கார்த்திகேயன், ஜெம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் P.பிரவீன் ராஜ் மற்றும் பல்வேறு விருந்தினர்கள் முன்னிலையில் வெளியிட்டனர்.