“லைக் பண்ணுங்க, ரேட்டிங் போடுங்க…” ஆன்லைன் மோசடியில் ரூ.69 லட்சத்தை இழந்த தஞ்சாவூர் டாக்டர்!

தஞ்சாவூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெண் டாக்டர், வயது 62. டாக்டராக பணி புரிந்த இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வீட்டில் இருந்து வருகிறார். அவ்வப்போது செல்போனில் நேரத்தை செலவிட்டு வந்த பெண் டாக்டரின் வாட்ஸ்-அப்புக்கு கடந்த வாரம் மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் ஆன்லைன் டாஸ்க்கில் குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

சைபர் க்ரைம்

அந்த மெசேஜ்க்கு கீழே அதில் விண்ணப்பிப்பதற்கான லிங்கும் இருந்தது. ஆன்லைன் மோசடி பேர்வழிகளின் ஆசை வலையில் வீழ்ந்த டாக்டர் அந்த லிங்கை கிளிக் செய்திருக்கிறார். அதன் இணைப்பு நேரடியாக மற்றொரு சமூக வலைத்தளமான டெலிகிராம் ஆப்பிற்கு சென்றுள்ளது. அதில் பேசிய மர்மநபர், ஆன்லைன் டாஸ்க் குறித்த விவரங்களை டாக்டரிடம் கூறியுள்ளார். இணைய வழியாக அனுப்பப்படும் டாஸ்க்குகளில் நவீன விடுதிகளின் போட்டோவிற்கு தரவரிசை அடிப்படையில் பிரித்து மதிப்பாய்வு செய்தல் வேண்டும். மேலும் நாங்கள் பதிவிடும் போட்டோவிற்கு ரேட்டிங் ஸ்டார், லைக் போடுவதுடன் அவற்றை ஸ்கீரின்ஷாட் எடுத்து அனுப்ப வேண்டும். இதை செய்தால் எளிதாக லாபத்தொகை பெறலாம் என டாக்டரிடம் மர்ம நபர் சொல்லியிருக்கிறார்.

இதை உண்மையென நம்பிய டாக்டர் ஆன்லைன் டாஸ்க்கை முடிப்பதற்கு ஒப்புக் கொண்டார். இதனையடுத்து தன்னுடைய விவரம், வங்கி கணக்கு போன்றவற்றை அனுப்பியுள்ளார். அதன் பிறகு மர்ம நபர்கள் பல டாஸ்க்குகள் கொடுத்து அதற்கு அட்டவணையும் கொடுத்துள்ளனர். டாஸ்கில் ஈடுபட்ட டாக்டர் வங்கி கணக்கில் ஆரம்ப போனஸாக ரூ.750 வரவு வைத்துள்ளனர். இதைதொடர்ந்து முதல் டாஸ்க்கின் தவணையாக ரூ.2,000 செலுத்தியுள்ளார். அதற்கு கூடுதல் லாபமாக ரூ.2,800 அனுப்பியுள்ளனர்.

சைபர் க்ரைம் (சித்திரிப்புப் படம்)

இதில் டாக்டர் மகிழ்ச்சி அடைந்ததுடன், ஆன்லைன் டாஸ்க் குறித்தும் முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இரண்டாவது டாஸ்க்கில் ரூ. 50,000 செலுத்தியுள்ளார். ஆனால் இதற்கான லாபத்தொகையை மர்ம நபர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்காமல் டாஸ்க் வாலட் கணக்கில் வரவு வைத்திருப்பதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு தவணைகளாக ரூ.69,69,000 ஆன்லைன் மூலம் அனுப்பியிருக்கிறார். ஆனால் அவருக்குரிய லாபத்தொகை கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் வாட்ஸ்-அப் கால் மூலம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். மறுமுனையில் பேசிய மர்ம நபர், நீங்கள் முழு டாஸ்க்கையும் முடித்தால்தான் உங்களுக்கான லாபம் கிடைக்கும் என்றதுடன் நிறுத்தாமல் பணம் கட்டுமாறு வலியுறுத்தியுள்ளார்.

அதன் பிறகு டாஸ்க் என சொல்லி மோசடி செய்து நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதையும், அந்த மோசடி நபர்கள் அனுப்பிய வாலட் வரவு கணக்கு போலியானது என்பதும் தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் 69 லட்சத்தை இழந்த அவர், இது தொடர்பாக தஞ்சை மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்க போலீஸ் வழக்குப்பதிவு செய்தததுடன் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.