தமிழ் சினிமாவின் ஸ்டார் தம்பதிகளில் முக்கியமானவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி. இருவரும் சினிமாவில் அவரவர் துறைகளில் கோலோச்சி வருகின்றனர். இந்நிலையிலும் கூட அவர்கள் பிசினஸ் ரீதியாக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர். அதாவது சொந்தமாக தொழில் தொடங்குவது, ஏற்கெனவே ஆரம்பித்திருக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது என தங்களில் பிசினஸ் சார்ந்த விஷயங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், முக்கியமாக இவர்கள் ரௌடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் 9 ஸ்கின் என்னும் ஸ்கின் கேர் கம்பெனியையும் நடத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் தி டிவைன் ஃபுட் என்ற தமிழ்நாட்டு பாரம்பரிய உணவு பொருள்களை வழங்கும் நிறுவனம், கார்பன் மெட்ராஸ் என்னும் க்ளாத்திங் கம்பெனி, தி லிப் பாம் என்னும் நேர்சுரல் லிப் பாம் கம்பெனி, கிரியேட்வெர்ஸ் என்ற கிரியேட்டர்ஸ் அசோசியேஷன் மற்றும் டார்க் டேலன்ட் என்ற கலைஞர் பிரதிநிதித்துவ நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதன் மூலம் முக்கிய பங்குதாரர்களாகவும் உள்ளனர்.
இந்நிலையில் உலகின் மிக பெரிய நோய் பரிசோதனை ஆய்வக நிறுவனமான தைரோகேரின் நிறுவனர் டாக்டர் வேலுமணியின் புகைப்படங்களை பதிவிட்டு, சில கருத்துகளையும் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார்.
“நாங்கள் ( நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்) ஒன்றும் எம்பிஏ பட்டம் பெற்றவர்கள் அல்ல. எங்களுக்கு தெரிந்ததெல்லாம் சினிமா மட்டும்தான். அதை நாங்கள் தினம்தோறும் கற்றுகொண்டு வருகிறோம். ஆனாலும் நாங்கள் எங்களது தொழில் முயற்சிகளை மேற்கொண்டு, அதை நிர்வகித்து வருகிறோம். எங்களை வழிநடத்தும் டாக்டர் வேலுமணி போன்றவர்கள்தான் இதற்கு காரணம். உங்களுடைய மகத்தான மற்றும் விலைமதிப்பற்ற அறிவும், அனுபவ பகிர்வும் எங்களது தொழிலை மேம்படுத்திக்கொள்ள உறுதுணையாக இருக்கிறது. எங்களுடனும் , எங்கள் குழுவினருடனும் பொறுமையாக நேரத்தை செலவிடும் உங்களுக்கு நன்றி. மேலும் உங்களுடனும், உங்கள் மகன் ஆனந்துடனும், எனது குழுவினருடனும் நான் இன்னும் அதிக நேரத்தை செலவிடவேண்டும் என எதிர்பார்க்கிறேன்” இவ்வாறாக அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து தைரோகேர் நிறுவனரும் பிசினஸ் வழிகாட்டியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் டாக்டர் வேலுமணியிடம் கேட்டபோது, “நயன்தாரா மற்றும் வினேஷ் சிவன் குழுவினர் மேற்கொண்டுவரும் பிசினஸ் மற்றும் முதலீடுகளுக்கான யோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் கேட்டு என்னை அணுகினர். நான் இப்போது அவர்களின் பிசினஸ் சிறக்க தேவையான வழிகாட்டுதல்களை கொடுத்து வருகிறேன். நயன்தாரா விக்னேஷ்சிவன் போன்ற பல சினிமா பிரபலங்கள் தற்போது, பிசினஸ் ஆரம்பிப்பது வரவேற்கத்தக்க விஷயம். சினிமா பிரபலங்கள் பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும்” என்றார்.