“8,000 பேருக்கு வேலை…” ரூ.25 ஆயிரம் கோடியில் கார் தொழிற்சாலை அமைக்கும் டொயேட்டா நிறுவனம்..!

மகாராஷ்டிராவிற்கு வரக்கூடிய தொழிற்சாலைகள் அனைத்தும் குஜராத்திற்கு செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதனை சமாளிக்கும் விதமாக இப்போது டொயேட்டா நிறுவனம் சாம்பாஜி நகரில் ரூ.25 ஆயிரம் கோடியில் கார் தொழிற்சாலை ஒன்றை அமைக்க முன்வந்துள்ளது.

இது தொடர்பாக மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில், ”டொயேட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் மகாராஷ்டிராவின் மகாத்வாடாவில் உள்ள சாம்பாஜி நகரில் கார் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மராத்வாடா பகுதி மேம்படும். இது மராத்வாடாவில் தொழில் வளர்ச்சிக்கான தொடக்கமாகும். 25 ஆயிரம் கோடியில் அமையும் இத்தொழிற்சாலை மூலம் 8 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை கிடைக்கும். மேலும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 16 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

ஒட்டுமொத்தமாக 24 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். புதிதாக தொடங்கப்படும் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 4 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். அடுத்த மூன்று ஆண்டில் தொழிற்சாலையில் கார் உற்பத்தி தொடங்கும்”என்றார்.

இது வரை டொயேட்டா நிறுவனம் கர்நாடகாவில் மட்டும்தான் கவனம் செலுத்தி வந்தது. கர்நாட்காவில் இரு தொழிற்சாலைகள் இருக்கிறது. கடந்த ஆண்டு மூன்றாவது புதிய தொழிற்சாலை தொடங்கப்படும் என்றும், அதில் 2026-ம் ஆண்டு உற்பத்தி தொடங்கும் என்று டொயேட்டா நிறுவனம் அறிவித்து இருந்தது. அதன் தொடர்ச்சியாக இத்தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. சாம்பாஜி நகரில் தொடங்கப்படும் தொழிற்சாலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்கள் என இரண்டும் தயாரிக்கப்படும் என்று டொயேட்டா நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கான ஒப்பந்தம் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் கையெழுத்தானது. முன்னதாக மகாராஷ்டிரா அமைச்சரவை துணை கமிட்டி 81 ஆயிரம் கோடி மதிப்பிலான 7 மெகா தொழிற் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியது. இத்தொழிற்சாலை, கொங்கன், மராத்வாடா, விதர்பாவில் அமைகிறது. செமிகண்டக்டர், லித்தியம் பேட்டரி, பசுமை எரிசக்தி துறையில் இந்த முதலீடுகள் செய்யப்படும். மும்பை அருகில் உள்ள தலோஜாவில் 12 ஆயிரம் கோடியில் செமிகண்டக்டர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட இருக்கிறது. இத்திட்டங்கள் மூலம் மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.