`தனது சாதி தெரியாதவர்’- ராகுலை மறைமுகமாகச் சாடிய அனுராக்; பாராட்டிய மோடி… கிளம்பும் எதிர்ப்பு!

பீகாரில் கடந்த 2022 பிற்பாதியில் பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறிய நிதிஷ் குமார், ஆர்.ஜே.டி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணியமைத்து மீண்டும் முதல்வரான பிறகு, அதே ஆண்டு அக்டோபரில் மாநில அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட்டார். அதோடு, மாநில அரசின் இட ஒதுக்கீட்டை 65 சதவிகிதமாக உயர்த்துவதாகவும் உறுதியளித்தார். அன்றுமுதல் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் பா.ஜ.க அரசை வலியுறுத்திவருகின்றன.

சாதிவாரி கணக்கெடுப்பு

ஆனால், இதில் வாய்திறக்காமல் மௌனமாக இருந்த பா.ஜ.க அரசு, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் பறிக்கப் பார்க்கிறது என்று மக்களவைத் தேர்தலில் பிரசாரங்களை மேற்கொண்டது. சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கும் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் ஆதரவுடன் மத்தியில் ஆட்சியமைத்த பிறகும், இந்த விவகாரத்தில் பா.ஜ.க அமைதியாக இருக்கிறது. இருப்பினும், அரசின் அனைத்து திட்டங்களும், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்குச் சரியாகச் செல்ல தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இத்தகைய சூழலில், கடந்த வாரம் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மீது மக்களவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மத்திய பட்ஜெட்டில் 20 அதிகாரிகள் பணியாற்றியிருக்கின்றனர். ஆனால், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர்கூட இதில் இடம்பெறவில்லை.

ராகுல் காந்தி

நாட்டின் மக்கள்தொகையில் 73 சதவிகிதம் கொண்ட இந்த மூன்று சமூகத்தினருக்கு பட்ஜெட்டில் எதுவும் கிடைக்கவில்லை. இன்றைய இந்தியாவில் தாமரை வடிவிலான சக்ரவியூகம் இருக்கிறது. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் இதில் சிக்கியிருக்கின்றனர். மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி, அதானி ஆகிய ஆறு பேர் இதைக் கட்டுப்படுத்துகின்றனர்” என்று உரையாற்றியிருந்தார்.

அனுராக் தாகூர்

இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய எம்.பி-யுமான அனுராக் தாகூர், ராகுல் காந்தியை சாதி மற்றும் மதரீதியாக மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருப்பதும், அதனை பிரதமர் மோடி பாராட்டியிருப்பதும் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

ராகுலின் பேச்சுக்கு நேற்று மக்களவையில் எதிர்வினையாற்றிய அனுராக் தாகூர், “தன்னுடைய சாதி தெரியாதவர் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார். மேலும், ஒரு சிலர் தற்செயலாக இந்துக்களாகினர். அதனால், மகாபாரதத்தைப் பற்றிய அவர்களின் அறிவும் அப்படித்தான் இருக்கும்” என்று தாக்கினார்.

இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, “ஆதிவாசி, தலித், பிற்படுத்தப்பட்டோர் பிரச்னைகளை யார் எழுப்பினாலும் அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். இருப்பினும், இதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். அனுராக் தாகூர் என்னை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார், அவமானப்படுத்தியிருக்கிறார்.

மக்களவை

ஆனால், அவரிடமிருந்து எந்தவொரு மன்னிப்பு கோரலும் நான் விரும்பவில்லை. என்னை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம். சாதிவாரி கணக்கெடுப்பை நாடாளுமன்றத்தில் நாங்கள் நிறைவேற்றுவோம்” என்றார். இன்னொருபக்கம், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், “எப்படி ஒருவரின் சாதியைக் கேட்க முடியும்?” என அனுராக் தாகூருக்கு கேள்வியெழுப்பினார்.

மேலும், பல எதிர்க்கட்சி எம்.பி-க்களும் அனுராக் தாகூரின் இத்தகைய பேச்சை எதிர்த்தனர். ஆனால், அவையில் பற்றியெரிந்த இந்தச் சம்பவத்துக்குப் பொதுவெளியில் மேலும் எண்ணெய் ஊற்றும் விதமாக பிரதமர் மோடி, “எனது இளம் மற்றும் ஆற்றல் மிகுந்த சகாவான அனுராக் தாகூரின் இந்தப் பேச்சு, அவசியம் கேட்க வேண்டிய ஒன்று. உண்மைகள் மற்றும் நகைச்சுவையின் இந்த சரியான கலவை, இந்தியா கூட்டணியின் மோசமான அரசியலை அம்பலப்படுத்துகிறது” என்று ட்வீட் செய்து, அனுராக் தாகூர் அவையில் பேசிய வீடியோவை தனது X சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

இவரைத் தொடர்ந்து அனுராக் தாகூர், அகிலேஷ் யாதவின் பழைய வீடியோவை வெட்டி, “நீங்கள் எப்படி சாதி பற்றி கேட்கலாம் அகிலேஷ் யாதவ்?” என இன்று காலை ட்வீட் செய்திருக்கிறார்.

இன்னொருபக்கம், கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “நேற்று நாடாளுமன்றத்தில் `தன் சாதி தெரியாதவர் சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி பேசுவதா?’ என்று ராகுல் காந்தி குறித்து அனுராக் தாகூர் பேசினார்.

சு.வெங்கடேசன்

அந்த பேச்சை அனைவரும் கேட்க வேண்டிய சிறந்த பேச்சு என்று பிரதமர் தனது X தளத்தில் பதிவிட்டார். நாட்டின் மிக உயர்ந்த ஓர் அவையில் பா.ஜ.க-வின் குரல் எவ்வளவு அவலத்தோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது பாருங்கள்” என்று விமர்சித்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து பல எதிர்க்கட்சியினர் பலரும் அனுராக் தாகூரின் செயலைக் கண்டித்தும், மோடியின் பாராட்டை விமர்சித்தும் வருகின்றனர். மேலும், அனுராக் தாகூரின் வீடியோவை பார்க்க வேண்டும் என மோடி கூறியதற்கு எதிராக, நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.