திருச்சி: பள்ளியில் கோஷ்டி சண்டை; தடுக்க சென்ற ஆசிரியரின் தலையில் வெட்டிய மாணவர் – அதிர்ச்சி சம்பவம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அரசு உதவிபெறும் இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், முன்பகை காரணமாக இரண்டு மாணவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இன்று அந்த மாணவர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி சண்டையை தடுக்கச் சென்ற ஆசிரியர் சிவக்குமாரை, ‘நீ யார் எங்களை தடுக்க?’ என்று கூறி மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து, வெட்டுப்பட்ட ஆசிரியரை சக ஆசிரியர்கள் மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

காயமடைந்த ஆசிரியர்

அதோடு, இந்த கோஷ்டி சண்டையில் மாணவர் ஒருவருக்கும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சிவக்குமாருக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டதால், மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையில், கோஷ்டி சண்டையில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் பதின்ம வயதுடையவர்கள் என்பதால், இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கோஷ்டி சண்டையை தடுக்கச் சென்ற ஆசிரியர் ஒருவரை மாணவர் தலையில் வெட்டியுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.